புதுச்சேரி பல்கலையில் 30வது பட்டமளிப்பு விழா
புதுச்சேரி: புதுச்சேரி பல்கலையில் 5 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று நடந்த 30வது பட்டமளிப்பு விழாவில் 89 ஆயிரத்து 476 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. புதுச்சேரி பல்கலையில் 30வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. பல்கலை வளாகத்தில் உள்ள சர்வதேச மாநாட்டு மையத்தில் நடந்த விழாவிற்கு துணை வேந்தர் பிரகாஷ்பாபு வரவேற்றார். கவர்னர் கைலாஷ்நாதன் முதல்வர் ரங்கசாமி முன்னிலை வகித்தனர். விழாவிற்கு தலைமை தாங்கி, பட்டமளிப்பு வி ழாவை துவக்கி வைத்து , கல்வியில் சிறந்து விளங்கிய மாற்று திறன் மாணவர்கள் காவ்யா, தேவிடட்டா மொகபட்ரா, முகத் அஸ்லாம், கிஷிதிஜா நிலேஷ் ஜாதவ் உள்ளிட்ட 10 பேருக்கு பட்டம் மற்றும் தங்கப்பதக்கங்களை வழங்கிய துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். அப்போது, அவர் மாகி மற்றும் ஏனாமில் சமுதாய கல்லுாரி கட்ட நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த கல்லூரிகளில் திறன் சார்ந்த படிப்புகள் கொண்டுவரப்படும். அதனால், அந்த பிராந்தியங்கள் முன்னேற்றமடையும் என்றார் தேசிய பாதுகாப்பு ஆலோசனை வாரியக்குழு உறுப்பினர் சதீஷ்ரெட்டி பட்டமளிப்பு சிறப்புரையாற்றினார். துணை வேந்தர் பிரகாஷ்பாபு தலைமையில் மாணவர்கள் பட்டமளிப்பு உறுதிமொழி ஏற்றனர். முன்னதாக, பல்கலை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள சர்வதேச மாநாட்டு மையத்தை துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் திறந்து வைத்து, மகாகவி பாரதியார் சர்வதேச மாநாட்டு மையம் என பெயர் சூட்டினார். பின்னர், தேசியக்கொடி ஏற்றப்பட்டிருந்த 100 அடி உயர கொடிக் கம்பத்தின் கல்வெட்டை திறந்து வைத்து, மரக்கன்று நட்டார். விழாவில் சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம், செல்வகணபதி எம்.பி., கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ.,, தலைமை செயலர் சரத்சவுகான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.