உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வீடு புகுந்து 40 சவரன் நகை கொள்ளை

வீடு புகுந்து 40 சவரன் நகை கொள்ளை

நெட்டப்பாக்கம்: பட்டப்பகலில் வீடு புகுந்து, 40 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். புதுச்சேரி அடுத்த கரியமாணிக்கம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் கோவிந்தராஜ், 63; இவர், வீட்டின் பின் பகுதியில் ரைஸ்மில் நடத்தி வருகிறார். இவர், கடந்த 8ம் தேதி காலை தனது மனைவி சுமதியுடன் சூரமங்கலத்தில் நடந்த உறவினர் வீட்டு வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்று வந்தார். மதியம் ஒரு மணிக்கு வீட்டிற்கு வந்ததும், சுமதி தனது நகைகளை கழற்றி பீரோவில் வைத்துவிட்டு தனது வேலைகளை கவனித்துள்ளார். நேற்று முன்தினம் மதியம் 2:00 மணிக்கு கடலுாரில் உள்ள உறவினர் வீட்டு சுப நிகழ்சிக்கு செல்வதற்காக சுமதி பீரோவில் வைத்திருந்த நகைகளை எடுக்க சென்றபோது, பீரோவில் வைத்திருந்த டாலர் செயின், நெக்லஸ், கம்மல், வளையல், ஜெயின், மோதிரம் உள்ளிட்ட 40 சவரன் நகைகளை காணவில்லை. வீடு முழுதும் தேடியும் கிடைக்கவில்லை. இதன் மதிப்பு ரூ. 25 லட்சம் ஆகும். இதுகுறித்து கோவிந்தராஜ் நேற்று அளித்த புகாரின்பேரில், நெட்டப்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், கோவிந்தராஜ், வீட்டை திறந்து வைத்துவிட்டு, வீட்டிற்கு பின்புறம் உள்ள ரைஸ்மில்லில் இருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், பட்ட பகலில் வீடு புகுந்து பீரோவில் இருந்த நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !