உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சைபர் குற்றவாளிகள் 5 பேருக்கு சிறை: புதுச்சேரி கோர்ட் அதிரடி தீர்ப்பு

சைபர் குற்றவாளிகள் 5 பேருக்கு சிறை: புதுச்சேரி கோர்ட் அதிரடி தீர்ப்பு

புதுச்சேரி: பிரபல நிறுவனத்தின் பெயரில், போலி விளம்பரம் வெளியிட்டு, பல லட்சம் ரூபாய் மோசடி செய்த 5 பேருக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து புதுச்சேரி கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. புதுச்சேரியை சேர்ந்தவர் சேதுராமன்; கான்ட்ராக்டர். இவர், கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம், சமூக வலைதளமான பேஸ்புக்கில் 'வைசாக் ஸ்டீல்' என்ற நிறுவனம் பெயரில், மார்க்கெட் விலையை விட 10 சதவீதம் குறைவாக டி.எம்.டி., கம்பி தருவதாக வந்த விளம்பரத்தை பார்த்து, ரூ.30.97 லட்சம் முன்பணம் செலுத்தி் ஆர்டர் செய்தார். ஆனால், ஆர்டர் கொடுத்த கம்பிகள் வரவில்லை. புகாரின் பேரில், புதுச்சேரி சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து, மகாராஷ்டிராவை சேர்ந்த ராகுல்குமார் சிங், 30; பீகாரை சேர்ந்த உத்தம் விஷால் குமார், 24; ராயுஷன் குமார், 24; அபிஷேக் குமார், 27; பெங்களூருவை சேர்ந்த தயாந்த், 30; ஆகியோரை கடந்த ஜூன் 20ம் தேதி கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 34 லட்சம் ரூபாய் ரொக்கம், 40 மொபைல் போன்கள், லேப்டாப் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 5 பேர் மீதும் புதுச்சேரி சி.ஜே.எம். கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அரசு தரப்பில் உதவி அரசு வழக்கறிஞர் கணேஷ் ஞான சம்மந்தம் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி யஸ்வந்த்ராவ் இங்கர்சோல், குற்றவாளிகள் 5 பேருக்கும் தலா 5 மாத சிறைத்தண்டனை மற்றும் தலா ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி