உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / 6 பேரிடம் ரூ.10 லட்சம் அபேஸ் : சைபர் கிரைம் கும்பல் கைவரிசை

6 பேரிடம் ரூ.10 லட்சம் அபேஸ் : சைபர் கிரைம் கும்பல் கைவரிசை

புதுச்சேரி: புதுச்சேரியில் 3 பெண்கள் உட்பட 6 பேர் சைபர் கிரைம் மோசடி கும்பலிடம் ரூ. 10 லட்சம் இழந்துள்ளார். புதுச்சேரியை சேர்ந்தவரை மொபைல் மூலம் தொடர்பு கொண்ட மர்மநபர் ஐ.டி.எப்.சி., வங்கியின் கடன் அதிகாரி போல் பேசியுள்ளார். அப்போது, குறைந்த வட்டியில் ரூ. 3 லட்சம் வரை லோன் வழங்குவதாகக் கூறியதுடன், லோன் பெற காப்பீடு மற்றும் முதலீடுத் திட்டத்தில் குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும் என, அறிவுறுத்தியுள்ளார். இதை உண்மை என நம்பி, மர்ம நபருக்கு பல்வேறு தவணைகளாகரூ. 6 லட்சத்து 76 ஆயிரம் அனுப்பி உள்ளார். அதன்பின், அந்த மர்மநபரை தொடர்பு கொள்ள முடியவில்லை. தட்டாஞ்சாவடியை சேர்ந்தவர் வெளிநாட்டு வேலை வாய்ப்பு தொடர்பான விளம்பரத்தை ஆன்லைனில் பார்த்துள்ளார். அதிலிருந்த மொபைல் எண்ணை வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொண்டு பேசியபோது, எதிர்முனையில் பேசிய நபர் இந்தோனேசியாவில் வேலை வாய்ப்பு இருப்பதாகவும், அந்த வேலைக்கு விசா மற்றும் விமான டிக்கெட் கட்டணம் செலுத்த வேண்டுமென கூறியுள்ளார். இதைநம்பி, மர்ம நபருக்கு ரூ. 1 லட்சத்து 47 ஆயிரம் அனுப்பி ஏமாந்துள்ளார். இதேபோல், கதிர்காமத்தை சேர்ந்த பெண், பகுதிநேர வேலையாக ஆன்லைன் வர்த்தகத்தில் ஒரு லட்சத்து 38 ஆயிரம், புதுச்சேரியை சேர்ந்தவர் 21 ஆயிரத்து 300, சாரத்தை சேர்ந்த பெண் 32 ஆயிரம், கதிர்காமத்தை சேர்ந்த பெண் 10 ஆயிரத்து 500 என, 6 பேர் மோசடி கும்பலிடம் 10 லட்சத்து 24 ஆயிரத்து 800 ரூபாய் இழந்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !