| ADDED : டிச 01, 2025 06:01 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் நடந்த வருங்கால வைப்பு நிதி உயர் பதவிகளுக்கான போட்டி தேர்வை 68.5 சதவீத பேர் எழுதவில்லை. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் உள்ள உதவி வருங்கால வைப்பு நிதி ஆணையர், அமலாக்க அதிகாரி, கணக்கு அதிகாரி ஆகிய பதவிகளுக்கான ஒருங்கிணைந்த போட்டி தேர்வு நாடு முழுவதும் நடந்தது. புதுச்சேரியில் காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், தாகூர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரி உள்ளிட்ட மூன்று மையங்களில் நடந்தது. தேர்வர்கள் காலை 8:00 மணி முதல் தேர்வு மையங் களுக்கு வர துவங்கினர். மெட்டல் டிடெக்டர் மூலம் தேர்வர்கள் சோதனை செய்யப்பட்டனர். தொடர்ந்து, ஹால் டிக்கெட் மற்றும் புகைப்படத்துடன் கூடிய அடையாள சான்று ஆகியவை சரிபார்க்கப்பட்டு, தேர்வு மையத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். காலை 9:00 மணிக்கு தேர்வு மையத்தின் நுழைவு வாயில் மூடப்பட்டது. அதன்பிறகு வந்த தேர்வர்கள் யாரும் தேர்வு மையத்தில் நுழைவதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. காலை 9:30 மணிக்கு துவங்கிய தேர்வு 11:30 மணிக்கு நிறைவடைந்தது. இந்த மூன்று பதவிக்கான போட்டி தேர்வினை எழுத 1,209 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் ஆண்கள்-217, பெண்கள்-164 பேர் என, மொத்தமாக 381 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். தேர்வு எழுதியோர் 31.51 சதவீதம். இத்தேர்வில் 828 பேர் கலந்து கொள்ளவில்லை. ஆப்சென்ட் 68.49 சதவீதம். தேர்வு மையங்களை தேர்வு ஒருங்கிணைப்பாளராக அரசு செயலர் ஸ்மிதா, கூடுதல் தேர்வு ஒருங்கிணைப்பாளராக போக்குவரத்து ஆணையர் சிவக்குமார், மத்திய தேர்வாணையம் சார்பில் ஆய்வு அதிகாரியாக மோனிக், பார்வையாளராக ஜி.எஸ்.டி., கூடுதல் ஆணையர் ராம்மோகன், சார்பு செயலர் ஜெய்சங்கர் ஆகியோர் ஆய்வு செய்த னர். தேர்வர்கள் கைப்பைகள், செல்போன்கள், புளுடூத் சாதனங்கள், ஹெட் போன்கள், கால்குலேட்டர்கள், பென்டிரைவ் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது.