காரைக்காலில் 7 செ.மீ., மழை பதிவு: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
காரைக்கால்: காரைக்காலில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில் நேற்று காலை 7.1 செ.மீ., மழை கொட்டியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. வங்கக் கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக டெல்டா மாவட்டங்களின் கடைமடை பகுதியான காரைக்காலில் கடந்த மூன்று தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நேற்று முன்தினம் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. மூன்றாம் நாளான நேற்று காலை 8:30 மணி முதல் மாலை 5:30 மணிவரை 7.1 செ.மீ., மழை கொட்டியது. அதன்பிறகும் மழை நீடித்தது.இதனால், காரைக்கால் நகரப்பகுதி மற்றும் நெடுங்காடு, கோட்டுச்சேரி, திருநள்ளாறு, திருப்பட்டினம், நிரவி உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்ததால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். தகவலறிந்த கலெக்டர் மணிகண்டன் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையினர் மழை நீர் சூழ்ந்த பகுதிகளை பார்வையிட்டதை தொடர்ந்து, தாழ்வான பகுதிகளில் சூழ்ந்த மழைநீர் ராட்சத மோட்டார்கள் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது.கடல் சீற்றமாக காணப்பட்டதால் கடற்கரை சாலை மூடப்பட்டு, மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கடல் கொந்தளிப்பாக உள்ளதால், மீனவர்கள் கடலுக்கு செல்லாமல், தங்கள் படகுகளை பாதுகாப்பாக துறைமுகங்களில் நிறுத்தி வைத்துள்ளனர். தொடர் மழை காரணமாக பல இடங்களில் மின் நிறுத்தம் செய்யப்பட்டது. நேற்று காலை முதல் பெய்த தொடர் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.