உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / 91 சதவீத வாக்காளர் படிவம் விநியோகம் இன்று முதல் வீடு, வீடாக சேகரிப்பு

91 சதவீத வாக்காளர் படிவம் விநியோகம் இன்று முதல் வீடு, வீடாக சேகரிப்பு

புதுச்சேரி: பூர்த்தி செய்த வாக்காளர் படிவங்கள் இன்று முதல் வீடு வீடாக சேகரிக்கப்பட உள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த பணி கடந்த 4ம் தேதி தொடங்கியது. வீடு வீடாக சென்று சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான கணக்கெடுப்பு படிவத்தை தேர்தல் துறை அதிகாரிகள் தந்தனர். புதுச்சேரியில் இதுவரை 91 சதவீத பேருக்கு வாக்காளர் படிவங்கள் கொடுக்கும் பணி நிறைவடைந்துள்ளது. இன்னும் சில தினங்களில் இப்பணி நிறைவு பெற்று விடும். இது குறித்து தேர்தல் துறை அதிகாரிகள் கூறியதாவது: புதுச்சேரி 10. 21 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அதில் வீடு தேடி சென்று 91 சதவீத படிவங்கள் தரப்பட்டுள்ளன. 2002ல் உள்ள வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று, தற்போது உள்ள ஆவணங்கள் 4 லட்சம் பேருடன் தற்போது இணைந்துள்ளது. மீதி விடுபட்ட வாக்காளர்களுக்கு வீடு தேடி சென்று கணக்கெடுப்பு படிவங்கள் தர நடவடிக்கை எடுக்கப்படும். இன்று 10ம் தேதி முதல் ஒவ்வொரு வீடாக சென்று பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை அதிகாரிகள் பெறுவார்கள். படிவங்கள் சரியாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என்பதை பார்ப்பார்கள். தேவைப்பட்டால் உதவி செய்து பூர்த்தி செய்வார்கள். இன்னும் 2 வாரங்களுக்குள் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை திரும்ப பெறுவார்கள். 2002 வாக்காளர் பட்டியல் தகவல்கள் தேவைப்பட்டால் அவர்களுக்கு ஓட்டுச்சாவடி நிலை அதிகாரிகள் உதவுவார்கள். குறிப்பிட்ட காலத்துக்குள் பூர்த்தி செய்து வாக்காளர்கள் படிவங்கள் தர கோருவோம். சிறப்பு முகாம்களும் ஒரு மாதங்களுக்கு பிறகு நடக்கும்' என்றனர். செய்ய வேண்டியது இந்த வாக்காளர் படிவத்தில், வாக்காளர் பெ யர், இடம், பிறந்த தேதி, தந்தை, தாய் பெயர் தரவேண்டும். விருப்பம் இருந்தால் ஆதார் எண், மொபைல் எண், தந்தை மற்றும் தாயாரின் வாக்காளர் எண் தரலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது. 1.1.2002ல் அப்போது வாக்காளர் இருந்த முகவரி விவரம், அப்போது இருந்த வாக்காளர் எண் விவரங்களை தரவேண்டும். புதுச்சேரி, தமிழக தலைமை தேர்தல் அலுவலர் இணையத்தில் இதற்காக கடந்த 2002ம் ஆண்டு ஆவணங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி பழைய தகவல்களை பெறமுடியும். வயது மூத்தோர், உதவி தேவைப்படும் வாக்காளர்களுக்கு உதவ தன்னார்வலர்களும் இப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படிவம் பூர்த்தி செய்து அளிக்கும்போது எந்த ஆவணத்தையும் தர வேண்டியதில்லை. வாக்காளர் தற்போதைய புகைப்படம் ஒட்ட வேண்டும். பிறந்த தேதிக்கான ஆவணம் கையில் வைத்திருக்க வேண்டும். சிறப்பு தீவிர திருத்தப்படிவத்துடன், ஒப்புகை படிவமும் எழுதி தரவேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ