உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வணிக வளாகத்தில் வெடிகுண்டு சோதனை ஒத்திகையால் பரபரப்பு

வணிக வளாகத்தில் வெடிகுண்டு சோதனை ஒத்திகையால் பரபரப்பு

புதுச்சேரி: புதுச்சேரி தனியார் வணிக வளாகத்தில் திடீரென போலீசார் மேற்கொண்ட வெடிகுண்டு சோதனை ஒத்திகையால் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.சமீபத்தில் ஜிப்மர் மருத்துவமனை, பிரெஞ்சு துாதரகங்களுக்கு அடுத்தடுத்த நாட்கள், வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், புதுச்சேரியில் பரபரப்பு நிலவியது.இந்நிலையில், புதுச்சேரி- கடலுார் சாலையில் உள்ள தனியார் வணிக வளாகத்திற்கு சென்ற உருளையன் பேட்டை இன்ஸ்பெக்டர் கிட்லாசத்யநாராயணா மற்றும் போலீசார் அங்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக கூறி ஊழியர்கள் மற்றும் பொதுமக்களை வெளியேற்றினர்.பின்னர், வணிக வளாகத்திற்கு வெளியே போலீசார் குவிக்கப்பட்டு, சைரன் ஒலி எழுப்பப்பட்டது. இதனால், அங்கிருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.அதன் பிறகே, வெடிகுண்டு சோதனை தொடர்பான போலீசாரின் ஒத்திகை நிகழ்ச்சி என வணிக வளாக நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, எஸ்.பி.,க்கள்லட்சுமி சவுஜன்யா, ரகுநாயகம் தலைமையிலான வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள், தீயணைப்புத் துறையினர் வரவழைக்கப்பட்டனர்.பின்னர், அங்கிருந்த துணிக்கடையில் ஆடைகளுக்கு மத்தியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சூட்கேஸ் வெடிகுண்டு கண்டு பிடிக்கப்பட்டு, வெடிகுண்டு நிபுணர்கள் மூலம் அது பாதுகாப்பாக வெளியே கொண்டு செல்வதை தத்ரூபமாக செய்தனர்.காலை 11:00 முதல் 12:00 மணி வரை வணிக வளாகத்தில் தத்ரூபமாக நடத்தப்பட்ட வெடிகுண்டு சோதனை ஒத்திகையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பொதுமக்கள் அச்சம்

புதுச்சேரியில் போலீசார் ஏதேனும் ஒத்திகை நிகழ்ச்சி நடத்த முடிவு செய்தால், முன்னதாக தகவல் தெரிவிக்கப்படும். பின்னர் தான் ஒத்திகை நடப்பது வழக்கம். ஆனால், நேற்று தனியார் வணிக வளாகத்தில் நடந்தப்பட்டவெடிகுண்டு சோதனை ஒத்திகை எந்தவித முன் அறிவிப்பும் இன்றி தத்ரூபமாக நடந்ததால், வணிக வளாக ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் அச்சம் அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை