உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / போலி என்.ஆர்.ஐ., சான்றிதழ் அளித்த மூன்று மாணவர்கள் மீது நடவடிக்கை

போலி என்.ஆர்.ஐ., சான்றிதழ் அளித்த மூன்று மாணவர்கள் மீது நடவடிக்கை

புதுச்சேரி : புதுச்சேரியில் போலி என். ஆர்.ஐ., சான்றிதழ் அளித்து, மருத்துவக்கல்லுாரியில் சேர்ந்த, 3 மாணவர்களுக்கு சுகாதாரத்துறை 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது.புதுச்சேரியில் சென்டாக் மூலம், எம்.பி.பி.எஸ்., இடங்கள், 4 கட்டங்களாக நிரப்பப்பட்டன. என்.ஆர்.ஐ., ஒதுக்கீட்டில் உள்ள, 116 இடங்களில், 72 இடங்கள் நிரப்பப்பட்டன. மீதமுள்ள, 44 இடங்கள் நிர்வாக ஒதுக்கீடாக மாற்றப்பட்டு நிரப்பப்பட்டன.இந்த நிலையில் என்.ஆர்.ஐ., ஸ்பான்சர் எனும் பெயரில், பல மாணவர்கள் போலி சான்றிதழ் அளித்துள்ளதாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து என்.ஆர்.ஐ., இட ஒதுக்கீட்டிற்கு விண்ணப்பித்த மாணவர்களின் சான்றிதழை அந்தந்த நாட்டு துாதரகத்திற்கு அனுப்பி, சென்டாக் நிர்வாகம் விசாரித்தது.இதில் போலி சான்றிதழ் அளித்த, 49 பேர் மீது லாஸ்பேட்டை போலீசில் சென்டாக் கன்வீனர் ெஷரின் ஆன்சிவம் புகார் அளித்தார். இதற்கிடையில் 'சீட்' பெற்று கல்லுாரியில் படித்து வரும் மாணவர்களின் சான்றிதழ்களையும் சென்டாக் நிர்வாகம், வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் உதவியுடன் வெளிநாட்டில் உள்ள இந்திய துாதரக அலுவலகத்திற்கு அனுப்பி விசாரித்தது.இந்த நிலையில் மேலும், 3 பேர் போலி சான்றிதழ் சமர்ப்பித்தது தெரிய வந்தது. இதில், 1 மாணவர் அரசு மருத்துவ கல்லுாரியிலும், 2 மாணவர்கள் தனியார் மருத்துவ கல்லுாரியிலும் படித்து வருகின்றனர். இந்த மாணவர்களிடம் விளக்கம் கேட்டு, சுகாதாரத்துறை 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது.இது குறித்து சுகாதாரத்துறை இயக்குனர் செவ்வேள் கூறியதாவது:மாணவர்கள், 3 பேரும் பதில் அளிக்க, 2 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் அந்த மாணவர்கள் மருத்கதுவக்கல்லுாரியில் இருந்து நீக்கப்படுவர். அவர்கள் மீது போலீசில் புகார் அளிக்கப்படும்.அவர்களால் காலியாகும் மருத்துவ இடங்களை வரும், 25,ம்தேதி முதல் 29,ம் தேதிக்குள் சிறப்பு கலந்தாய்வு நடத்தி நிரப்ப மத்திய மருத்துவ கமிட்டி அனுமதி வழங்கி உள்ளது. இந்த இடங்கள் சென்டாக் மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ