உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மோசடி கும்பலுக்கு வங்கி கணக்கு துவக்கி கொடுத்தால் நடவடிக்கை: சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை

மோசடி கும்பலுக்கு வங்கி கணக்கு துவக்கி கொடுத்தால் நடவடிக்கை: சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை

புதுச்சேரி: மோசடி கும்பலுக்கு வங்கிக் கணக்கு கொடுத்து துணை போவது தெரிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சைபர் கிரைம் எஸ்.பி., ஸ்ருதி கூறியதாவது: சைபர் மோசடி கும்பல்களுக்கு அதிக பணப் பரிவர்த்தனை செய்ய வங்கிக் கணக்கு தேவைப்படுவதால், சமூக வலைதளங்கள் மூலம் பொதுமக்களை தொடர்பு கொண்டு, வங்கி கணக்கு துவக்கி கொடுத்தால், கமிஷன் தருவதாக ஆசை வார்த்தை கூறுகின்றனர். அதனால் சிலர் போலியான ஜி.எஸ்.டி., நம்பர், ஆர்.ஓ.சி., உதயம் சான்றிதழ் மூலம் தங்கள் பெயரில் வங்கிக் கணக்கு துவங்கி கொடுக்கின்றனர். மேலும், சிலர் கடைகளை வாடகைக்கு எடுத்து கம்பெனி துவங்குவது போல், அதனை கொண்டு வங்கி கணக்கை துவக்கி, சைபர் குற்றவாளிகளிடம் கொடுத்து பணம் பெற்று கொள்கின்றனர். ஆகையால், பொதுமக்கள் மற்றும் கடை உரிமையாளர்கள் உங்கள் கடைகள் மற்றும் இடத்தை யாரேனும் வாடகைக்கு கேட்டால் அவர்கள் எதற்காக கேட்கின்றனர். அங்கு என்ன நடக்கிறது என்று உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், வங்கி ஊழியர்கள் வங்கிக் கணக்கு துவங்குவதற்கு முன், அவர்கள் அளிக்கும் ஆவணங்களான ஜி.எஸ்.டி., நம்பர், உதயம் சான்றிதழ் மற்றும் ஆர்.ஓ.சி., ஆகியவை உண்மையா என உறுதிப்படுத்திக் கொண்டு வங்கிக் கணக்கை துவக்க வேண்டும். அதனை மீறி சைபர் மோசடி கும்பலுக்கு வங்கிக் கணக்கு துவக்கி கொடுப்பது அல்லது வேறு ஏதேனும் வழியில் துணை போவது தெரிந்தால் அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !