ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகம் முற்றுகை
புதுச்சேரி : அரசு மகளிர் தொழில்நுட்ப கல்லுாரி மாணவிகளுக்கு, சென்டாக் கட்டணம் செலுத்தாததை கண்டித்து, ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தை மாதர் சங்கத்தினர் முற்றுகையிட்டனர்.புதுச்சேரி, லாஸ்பேட்டையில் உள்ள அரசு மகளிர் தொழில்நுட்ப கல்லுாரியில், சென்டாக் மூலம் தேர்வாகி சேர்க்கை பெற்ற மாணவிகள் 30 பேருக்கு, கடந்த 2023ம் ஆண்டு முதல், ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் செலுத்த வேண்டிய கட்டணம் செலுத்தாமல் உள்ளதாக தெரிகிறது.இதனால், பாதிக்கப்பட்ட மாணவிகள், தேர்வு எழுத முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதை கண்டித்து, ஜனநாயக மாதர் சங்க நிர்வாகிகள் சத்யா, உமா சாந்தி ஆகியோர் தலைமையில், பாதிக்கப்பட்ட மாணவிகள், பெற்றோர் மற்றும்மாணவர் அமைப்பினர் திரண்டு, புதுச்சேரி ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தை நேற்று மதியம் 3:00 மணிக்கு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, சென்டாக் மூலம் தேர்வானமாணவிகளுக்கு, உடனடியாக கல்லுாரி கட்டணத்தை செலுத்த வேண்டும் என வலியுறுத்தி, கோஷம் எழுப்பினர்.