புதுச்சேரி: விவசாய மின் மோட்டார் இணைப்புகளை சூரிய மின் சக்தி திட்டத்திற்கு மாற்றும் பொருட்டு, வேளாண் துறை சார்பில், மின் மோட்டார்கள் கணக்கெடுக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.புதுச்சேரி அரசு விவசாய பயன்பாட்டிற்கு இலவச மின்சாரம் வழங்கி வருகிறது. இதற்காக ஆண்டிற்கு ரூ.5 கோடியை அரசு, மின்துறைக்கு வழங்கி வருகிறது. மாநிலத்தில், ஆண்டிற்கு ஆண்டு மின் தேவை அதிகரித்து வருகிறது. இதனால், ஒவ்வொரு ஆண்டும் மின் கொள்முதலுக்கு பெரும் தொகை செலவிட வேண்டியுள்ளது.இதனை தவிர்க்க புதுச்சேரி அரசு, வீடுகளுக்கு மத்திய அரசின் பிரதம மந்திரி சூரிய மின்னொளி திட்டத்தை அமல்படுத்துவதில் தனிக் கவனம் செலுத்தி வருகிறது.அதேபோன்று, விவசாய மின் மோட்டார்களையும் சூரிய மின்னொளி திட்டத்தில் மாற்றினால், இலவச மின்சாரத்திற்கு செலவிடும் தொகை முற்றிலுமாக தவிர்க்கலாம்.அதற்காக, மாநிலத்தில் உள்ள அனைத்து ஆழ்குழாய் கிணறுகளுக்கும் சூரிய மின் ஒளி திட்ட இணைப்பை 100 சதவீத மானியத்தில் வழங்க முடிவு செய்துள்ளது. இத்திட்டத்தை நபார்டு வங்கியின் ரூ.250 கோடி கடனுதவி திட்டத்தில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்காக விவசாய மின் மோட்டார்கள் அமைவிடம், சர்வே எண், நிலத்தின் உரிமையாளர் பெயர், மின்மோட்டார் திறன், ஆழ்குழாய் கிணற்றின் ஆழம், மின்சார பாலிசி எண், நிலத்தடி நீர் ஆணையத்தில் பதிவு செய்த எண் மற்றும் தேதி உள்ளிட்ட விபரங்கள் வேளாண் துறை சார்பில் அந்தந்த பகுதி உழவர் உதவியங்கள் மூலம் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.தொலைநோக்கு திட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ள இத்திட்டம் குறித்து அரசு, எவ்வித முன்னறிவிப்பு இல்லாமல் திடீரென கணக்கெடுப்பு பணியை துவங்கியுள்ளது விவசாயிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், 'அரசு கொண்டு வரும் எந்த நலத்திட்டத்திற்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்போவதில்லை. ஆனால், அத்திட்டம் பற்றிய முழு விபரங்களையும், அதில் ஏற்படும் சந்தேகங்களை தெளிவுப்படுத்த வேண்டாமா?குறிப்பாக புதுச்சேரியில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. இதனால், விவசாய மின் மோட்டார்கள் 500 அடி முதல் 700 அடி ஆழத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு 15 முதல் 20 குதிரை திறன் கொண்ட மோட்டார்கள் பயன்படுத்தப்படுகிறது. இந்த அதிக திறன் கொண்ட மின்மோட்டார்களை இயக்குவதற்கு தேவையான அளவிற்கு மின்சாரம் சூரிய மின்னொளி திட்டத்தில் கிடைக்குமா? மேலும், விவசாயிகள் பெரும்பாலும், இரவுநேரத்தில் தான் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவார்கள். சூரிய மின்னொளி திட்டத்தில் இரவில் மின் மோட்டார்களை இயக்க முடியுமா? சோலார் பேனல்கள் அமைக்க எவ்வளவு இடம் தேவை. அதனை பாதுகாப்பது எப்படி. இப்படிப்பட்ட பல சந்தேகங்களை போக்கிட, குறைந்தபட்சம் கிராம அளவிலாவது வேளாண் துறை சார்பில், சூரிய மின்னொளி திட்டம் குறித்து போதிய விழிப்புணர்வு கூட்டம் நடத்திவிட்டு, கணக்கெடுப்பு நடத்த வேண்டும். மேலும், இதில் உள்ள நடைமுறை சிக்கல்களை எளிமை படுத்த வேண்டும்' என்கின்றனர்.
வெளியில் நெய்யை தேடுவது ஏன்?
மேலும் புதுச்சேரி நிலத்தடி நீர் ஆணையத்திடம் அனுமதி பெற்று தான் மானியத்தோடு ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டுள்ளது. இதன் விவரங்கள் முழுவதும் அவர்களிடம் இருக்கும். அதுபோல், இலவச மின்சாரம் வழங்குவதால், பாலிசி எண் உட்பட அனைத்து விவரங்களும் மின்துறையிடம் உள்ளது. பிறகு ஏன் மீண்டும் ஒரு கணக்கெடுப்பு எதற்கு என விவசாயிகள் கேள்வி எழுப்புகின்றனர்.