உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  மழை நிவாரணம் ரூ.10 ஆயிரம் அ.தி.மு.க., வலியுறுத்தல்

 மழை நிவாரணம் ரூ.10 ஆயிரம் அ.தி.மு.க., வலியுறுத்தல்

புதுச்சேரி: வடிகால் விஷயத்தில் அரசு முழுமையாக தோல்வி அடைந்துள்ளதாக அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் குற்றம் சாட்டியுள்ளார். அவர், கூறியதாவது; வங்க கடலில் ஏற்பட்டுள்ள 'டிட்வா' புயல் காரணமாக புதுச்சேரியில் நேற்று முன்தினம் முதல் தொடர் மழை பெய்து வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த பட்ஜெட்டில் வேளாண் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் 50 சதவீதம் கூட செலவிடப்படாமல் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. அதில் இருந்து ரூ.300 கோடியை விடுவித்து மக்களுக்கு மழைக்கால நிவாரணமாக மஞ்சள் ரேஷன் கார்டிற்கு ரூ.5 ஆயிரம், சிவப்பு ரேஷன் கார்டிற்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். முதல்வர் உடனடியாக அமைச்சரவையை கூட்டி இதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும். தே.ஜ., கூட்டணி ஆட்சியில் சாலை அபிவிருத்தி மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளுக்கு அதிகளவில் நிதி செலவிடப் பட்டுள்ளது. அந்த பணிகள் தரமாக செய்யப்படாததால், நேற்று முன்தினம் பெய்த 7.4 செ.மீ., மழைக்கே நகரில் பெரும்பாலான சாலைகள் சேதமடைந்துள்ளன. பல பகுதிகளில் வடிகால் வாய்க்கால்கள் சீரமைக்காததால், மின் மோட்டார் மூலம் மழை நீர் வெளியேற்றப்படுகிறது. வடிகால் விஷயத்தில் அரசு முழுமையாக தோல்வி அடைந்துள்ளது. நீர்நிலை, கழிவு நீர் மற்றும் வடிகால் வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும். இப்பிரச்னையில் கவர்னர் தலையிட்டு, புதுச்சேரி நகரை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்க வேண்டும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி