கட்டுமான பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த அ.தி.மு.க., வலியுறுத்தல்
புதுச்சேரி: கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த முதல்வர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் வலியுறுத்தி உள்ளார்.அவர், கூறியதாவது;அரசு வழங்கும் இலவச அரிசியின் விலை கிலோ ரூ.48.50 இருக்கும். ஆனால், அரசு ரூ.80க்கு கொள்முதல் செய்வதாக மாஜி முதல்வர் வைத்திலிங்கம் கூறியுள்ளதற்கு, அரசு உரிய பதில் அளிக்க வேண்டும்.மாநிலத்தில், கட்டுமான பொருட்களின் விலை சமீப காலமாக கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டிய அரசு, கண்டு கொண்டதாக தெரியவில்லை.மக்களுக்கு குறைந்த விலையில், தரமான கட்டுமான பொருட்களை வழங்க, அரசு சார்பில், உருவாக்கப்பட்ட கட்டுமான சொசைட்டிகள், அரசின் தவறான கொள்கை முடிவுகளால் இழுத்து மூடப்பட்டுள்ளன.இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, வியாபாரிகள் கட்டுமான பொருட்களின் விலையை தாறுமாறாக உயர்த்தி விற்பனை செய்கின்றனர். கடந்த 4 மாதங்களில் சிமெண்ட் மூட்டைக்கு ரூ.100, எம்.சாண்ட் யூனிட்டிற்கு ரூ.1,500, பி.சாண்ட் யூனிட்டிற்கு ரூ.1,000, ஜல்லி யூனிட்டிற்கு ரூ.1,100 விலை உயர்த்தி விற்கப்படுகிறது.இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த முதல்வர், கலெக்டர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மற்றும் கட்டுமான பொருட்களின் மொத்த விற்பனையாளர்களை அழைத்து பேசி, விலையேற்றத்தை கட்டுக்குள் கொண்டுவர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.