அமலோற்பவம் பள்ளி மாணவர் சாதனை
புதுச்சேரி : இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் அமலோற்பவம் முன் மழலையர் பள்ளி மாணவர் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். புதுச்சேரி அமலோற்பவம் கல்விக் குழுமத்தின், அமலோற்பவம் முன் மழலையர் பள்ளியில் பிரி.கே.ஜி., பயிலும் மாணவர் ரியான் ஆண்டனி அசாத்திய நினைவாற்றலால் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்-ல் (இந்திய சாதனைகள் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நடத்திய நினைவாற்றல் சோதித்து அறியும் போட்டியில் ஒரே நிமிடத்தில் 33 கார்களின் லோகோவை நினைவில் கொண்டு, விரைவாக அடையாளம் கண்டு தனது அசாத்திய நினைவாற்றல் மற்றும் கவனக்குவிப்பை வெளிப்படுத்தினார் சிறுவன் ரியான் ஆண்டனி. மிகச்சிறிய வயதில் இந்த அரிய சாதனை படைத்த சிறுவனை பாராட்டி, பள்ளி நிறுவனர் லுார்துசாமி ரியான் ஆண்டனிக்கு 12 கிராம் வெள்ளிக் காசுகள் வழங்கி கவுரவித்தார். அவர் கூறுகையில், 'ரியானின் சாதனை, மற்ற குழந்தைகளுக்கு முன்னுதாரணமாக தங்கள் திறமைகளை அர்ப்பணிப்போடும் ஆர்வத்தோடும் வளர்த்துக் கொள்ள ஒரு உத்வேகமாக நிற்கிறது. இது அவரது குடும்பத்திற்கு மட்டுமல்ல, நிறுவனத்திற்கும் பெருமை சேர்த்துள்ளது. அமலோற்பவம் முன் மழலையர் பள்ளி இளம் மாணவர்களிடையே படைப்பாற்றல், தன்னம்பிக்கை மற்றும் முழுமையான வளர்ச்சியை வழங்கும் நோக்கில் செயல்பட்டுவருகிறது' என்றார்.