தனித்துவ ருசி கொண்ட ஆந்திரா அரக்கு காபி: புதுச்சேரியில் விற்பனை துவக்கம்
புதுச்சேரி: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் அரக்கு வேலி மலைபிரதேசங்களில் வசிக்கும் பழங்குடியினரால் இயற்கையான முறையில் பயிரிடப்பட்டு உற்பத்தி செய்யப்படும் அரக்கு காபி முன்னணி காபிகளில் ஒன்றாக இருந்து வருகிறது. பழங்குடியினரால் விற்பனை செய்யப்படும் இவ்வகையான காபி விதைகளை ஆந்திர அரசுக்கு சொந்தமான கிரிஜன் கூட்டுறவு நிறுவனம் கொள்முதல் செய்து, பெங்களூரில் உள்ள சப்பஸ் பிவிரேஜ் புட் பிரைவேட் லிமிட் தொழிற்சாலை நிறுவனம், அதனை விற்பனைக்கு ஏற்ற வகையில் உருமாற்றம் செய்கிறது.இந்த வகையான காபி குறைந்த அளவிலே விற்பனை செய்யப்படும் காரணத்தால், இந்திய காபி சந்தைகளில் பெருமளவில் இது விற்பனைக்கு வரவில்லை. அதனால் இக்காபி உலகத்தரம் வாய்ந்தது என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, பிரதமர் தனது மான் கீ பாத் சொற்பொழிவிலும், தனது சமூக வலைத்தள பக்கத்திலும் இக்காபி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளார். இந்தியாவில் விசாகப்பட்டினம் விமான நிலைய வளாகம், பெங்களூர் உற்பத்தி வளாகம், சமீபத்தில் இந்திய பார்லிமெண்ட் வளாகம் ஆகிய 3 இடங்களில் மட்டுமே இந்த வகையான காபி மக்கள் அருந்த கிடைக்கிறது. தற்போது 4வது இடமாக, புதுச்சேரியில் அண்ணா நகர், ஹவுஸிங்போர்டு அருகில் ஆந்திரா அரக்கு காபி விற்பனை துவங்கப்பட்டுள்ளது. இங்கு, ஆந்திரா அரக்கு காபி துாள் விற்பனைக்கு கிடைக்கிறது.