மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பம்... எப்போது; மாணவர்கள், பெற்றோர் தவிப்பு
புதுச்சேரி: நீட் ரிசல்ட் வெளியாகி 12 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் புதுச்சேரியில் மருத்துவ படிப்புகளுக்குவிண்ணப்பம் விநியோகம் துவங்கப்படாததால் பெற்றோர், மாணவர்கள் தவிப்பிற்குள்ளாகி வருகின்றனர்.தமிழகத்தில் கடந்த 6 ம் தேதி முதல் எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கு விண்ணப்பம் ஆன்லைனில் வரவேற்கப்பட்டு வருகின்றன. இந்த காலக்கெடு வரும் 29ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால், புதுச்சேரியில் எம்.பி.பி.எஸ்., உள்ளிட்ட நீட் மதிப்பெண் அடிப்படையிலான மருத்துவ படிப்புகளுக்கு எந்த நடைமுறையும் இன்னும் துவங்கவில்லை.நீட் ரிசல்ட் 14ம் தேதி வெளியான நிலையில், 12 நாட்கள் உருண்டோடி விட்டன. ஆனால், மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பம் புதுச்சேரியில் விநியோகிக்கப்படவில்லை. குறைந்தபட்சம் மருத்துவ படிப்புகளுக்கான தகவல் குறிப்பேடும் வெளியிடப்படவில்லை. எப்போது சென்டாக் விண்ணப்பம் வழங்கப்படும் என்ற உத்தேச அறிவிப்பு கூட இல்லை. எனவே, மருத்துவ படிப்பு குறித்து ஏதும் தெரியாமல் சென்டாக் அலுவலகத்திற்கு பெற்றோர்களும், மாணவர்களும் நடையாய் நடந்து வருகின்றனர். இதேபோல் நிர்வாக இடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பிற மாநில மாணவர்களும் தவிப்பிற்குள்ளாகி வருகின்றனர். இது பெற்றோர், மாணவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தேர்ச்சி பட்டியல் எங்கே
புதுச்சேரி மாநிலத்தில், இந்தாண்டு நீட் தேர்வு எழுத 5,266 மாணவர்கள் பதிவு செய்திருந்தனர். இவர்களில், 5,149 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். இதில் 2,639 மாணவர்கள் நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்றனர். மத்திய அரசிடம் புதுச்சேரி சுகாதார துறை அணுகி இந்த தேர்ச்சி பட்டியலை வெளியிட வேண்டும். இந்த தேர்ச்சி பட்டியலும் இன்னும் வெளியிடவில்லை. தமிழகம் டாப்
அதே நேரத்தில், தமிழகம் மருத்துவ சேர்க்கை ஜெட் வேகத்தில் உள்ளது. ஆனால், புதுச்சேரியில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான பேச்சுவார்த்தையே இன்னும் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. பெரிய மாநிலமான தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கு திட்டமிட்டு விண்ணப்பம் கொடுக்கும்போது, சிறிய மாநிலமான புதுச்சேரியில் ஏன் விண்ணப்பம் காலத்தோடு விநியோகம் செய்ய முடியவில்லை என்பதே பெற்றோர்களின் கேள்வியாக உள்ளது. கடைசி நொடி
இந்தாண்டு மட்டும் அல்ல. கடந்த காலங்களிலும் இப்படி தான் புதுச்சேரியில் மாணவர் சேர்க்கை காலதாமதமாகவே நடந்தது. எல்லாம் கடைசி நொடி; கடைசி நிமிட முடிவுகள் தான். இத்தனைக்கும் இந்தாண்டு தமிழகத்தினை காட்டிலும் சென்டாக் தான் முந்திக்கொண்டு முன் கூட்டியே மாணவர் சேர்க்கை நடைமுறைகளை துவங்கியது. ஆனால், வழக்கம்போல் அரசின் ஒத்துழைப்பு இல்லாமல் பின் தங்கி விட்டது.சுகாதார துறை உள்ளிட்ட அரசு துறைகளில் சுத்தமாக ஒத்துழைப்பு இல்லாததே இதற்கு முக்கிய காரணம். புதுச்சேரியில் அரசு மருத்துவ கல்லுாரி மற்றும் மூன்று தனியார் மருத்துவ கல்லுாரிகள் உள்ளன. இதில், அரசு மருத்துவ கல்லுாரியை பொருத்தவரை மொத்தமுள்ள 180 எம்.பி.பி.எஸ்., சீட்டுகளில் 131 இடங்கள் அரசு ஒதுக்கீட்டு இடங்களாக சென்டாக் மூலம் நிரப்பப்படுகிறது.மூன்று தனியார் கல்லுாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி கடந்தாண்டு 240 எம்.பி.பி.எஸ்., சீட்டுகளை இறுதி செய்தது. ஒட்டுமொத்தமாக கடந்தாண்டு அரசு 371 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் சென்டாக் மூலம் நிரப்பப்பட்டன.இந்தாண்டும் தனியார் கல்லுாரி நிர்வாகங்களிடம் முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. எனவே இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தையை தனியார் மருத்துவ கல்லுாரி நிர்வாகங்களிடம் விரைவில் ஆரம்பித்து, அரசு ஒதுக்கீட்டு இடங்களை சுகாதார துறை வாயிலாக இறுதி செய்ய வேண்டும். அதே வேகத்தில் மருத்துவ படிப்பிற்கான கவுன்சிலிங்கை சென்டாக் மூலம் நடத்தி முடிக்க வேண்டும். அதுவரை மருத்துவ விண்ணப்பம் குறித்த உத்தேச அட்டவணையை புதுச்சேரி அரசு வெளியிட்டு மாணவர்கள், பெற்றோர்களின் தவிப்பினை தணிக்க வேண்டும்.