உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பன்முக சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு அனுமதி!: புதுச்சேரியில் தொழில் வளர்ச்சி வேகம் எடுக்கும்

பன்முக சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு அனுமதி!: புதுச்சேரியில் தொழில் வளர்ச்சி வேகம் எடுக்கும்

புதுச்சேரியில் முதல் பல்முனை சிறப்பு பொருளாதார மண்டலம் கரசூரில் அமைய உள்ளது. இது குறித்து திட்ட ஆராய்ச்சி துறை இயக்குநர் ஷீலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் பொருளாதாரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, கரசூரில் 'பல்முனை சிறப்பு பொருளாதார மண்டலம்' அமைப்பதற்கு மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒப்புதல் வாரியம் முறைப்படி அனுமதி வழங்கியுள்ளது. புதுச்சேரி தொழில்துறை மேம்பாடு மற்றும் முதலீட்டுக் கழகத்தின் மூலம் செயல்படுத்தப்படவுள்ள இந்தத் திட்டம், யூனியன் பிரதேசத்தின் முதலாவது சிறப்பு பொருளாதார மண்டலமாகும். சேதராப்பட்டு - கரசூர் பிரதான சாலையில் அமையவுள்ள இந்த மண்டலம், புதுச்சேரியை உலகத்தரம் வாய்ந்த உற்பத்தி மற்றும் முதலீட்டு மையமாக மாறும்.இந்த பிரம்மாண்டமான திட்டம், பிப்டிக்கு சொந்தமான 213.12 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.2,500 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட உள்ளது. இதில் மண்டலத்திற்குள் அமையவிருக்கும் பல்வேறு தொழிற்சாலைகளின் முதலீடுகளும் உள்ளடங்கும். திட்டத்தின் மொத்த பரப்பளவில் 70 சதவீதம் 'செயலாக்க மண்டலமாக' பிரிக்கப்பட்டு, அங்கு ஏற்றுமதி சார்ந்த தொழிற்சாலைகள், உற்பத்தி அலகுகள் மற்றும் சர்வதேச வர்த்தகத்தை எளிதாக்கும் வகையில் ஒருங்கிணைந்த சுங்க உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும். இதன் மூலம் உலகளாவிய நிறுவனங்கள் புதுச்சேரியில் தங்களது கிளைகளைத் தொடங்க ஏதுவான சூழல் உருவாகும். தொழில்துறை வசதிகள் மட்டுமன்றி, இந்த மண்டலத்தின் எஞ்சிய 30 சதவீத பரப்பளவு 'செயலாக்கமற்ற மண்டலமாக மாற்றப்பட்டு, அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கான குடியிருப்புகள், வணிக வளாகங்கள், மருத்துவ மையங்கள், தீயணைப்பு நிலையம் மற்றும் வங்கி போன்ற சமூக உள்கட்டமைப்பு வசதிகள்அமைக்கப்படும்.இந்த கரசூர் சிறப்புப் பொருளாதார மண்டலத் திட்டம் அடுத்த பத்து ஆண்டுகளில் 40,000 பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை வழங்கும். இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ