அரியாங்குப்பம் கொம்யூன் அலுவலக பொருட்கள் ஜப்தி கோர்ட் உத்தரவை நிறைவேற்றாததால் அதிரடி
அரியாங்குப்பம்: கோர்ட் உத்தரவுப்படி ஊழியருக்கு பதவி வழங்காததால், அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலக பொருட்கள் நேற்று ஜப்தி செய்யப்பட்டது. அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில், துப்புரவு பணி செய்தவர் ராஜேந்திரன். இவருக்கு பிளம்பர் தொழில் தெரிந்ததால், கடந்த 2011 முதல் 2015ம் ஆண்டு வரை, பிளம்பர் பணியை பொறுப்பு அடிப்படையில் செய்து வந்தார். தனக்கு நிரந்தர பிளம்பர் பணி வழங்க கோரிக்கை மனு அளித்தார். ஆனால் கொம்யூன் நிர்வாகம் பிளம்பர் பதவி நிரப்ப விளம்பரம் செய்தது. கொம்யூன் யூனியன் சங்கம் சார்பில் தொழிலாளர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த 2017 ம் ஆண்டு ராஜேந்திரனுக்கு பதவி உயர்வு வழங்க தொழிலாளர் கோர்ட் உத்தரவிட்டது. கோர்ட் உத்தரவு நிறைவேற்றததால், கொம்யூன் அலுவலக பொருட்கள் ஜப்தி செய்ய நடவடிக்கை எடுத்தனர். அப்போது, கொம்யூன் நிர்வாகம் கால அவகாசம் கேட்டதுடன், உடனடியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. உயர்நீதிமன்றம் கொம்யூன் பஞ்சாயத்தின் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து, புதுச்சேரி நீதிமன்றம் அளித்த உத்தரவை நிறைவேற்ற கூறியது. இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற கோரி ராஜேந்திரன், புதுச்சேரி 2வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி சந்திரசேகரன், கொம்யூன் பஞ்சாயத்து அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.இதைத் தொடர்ந்து அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்திற்கு வந்த நீதிமன்ற அமீனாக்கள் ஜெயஅம்பி, சிவக்குமார் ஆகியோர், அலுவலக வளாகத்தில் இருந்த மகேந்திரா ஜீப், சுமோ கார், 407 மினி லாரி, 11 கம்யூட்டர்கள், ஜெனரேட்டர்களை ஜப்தி செய்து அலுவலகத்தில் நோட்டீஸ் ஒட்டினர்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.