சட்டசபை கூட்ட தொடர் கவர்னர் உரையுடன்... இன்று துவக்கம்: 12ல் முதல்வர் பட்ஜெட் தாக்கல் செய்கிறார்
புதுச்சேரி:புதுச்சேரி சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று துவங்குகிறது. கவர்னர் கைலாஷ்நாதன் முதல் முறையாக உரையாற்றுகிறார்.புதுச்சேரி அரசின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று 10ம் தேதி காலை 9:30 மணிக்கு துவங்குகிறது. கவர்னர் கைலாஷ்நாதன் உரையாற்றுகிறார். இதற்காக அவர் காலை 9:25 மணியளவில் ராஜ்நிவாசில் இருந்து காரில் புறப்பட்டு, சட்டசபை வளாகத்திற்கு வருகிறார். அங்கு அவருக்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்படுகிறது.தொடர்ந்து சபாநாயகர் செல்வம், அவரை வரவேற்று சட்டசபையின் மைய மண்டபத்திற்கு அழைத்து செல்கிறார். அங்கு சபாநாயகர் இருக்கையில் கவர்னர் கைலாஷ்நாதன் அமர்கிறார்.தொடர்ந்து 9:30 மணியளவில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டசபை துவங்குகிறது. கவர்னர் கைலாஷ்நாதன் தமிழில் உரையாற்றுகிறார். உரை முடித்த பிறகு கவர்னர் புறப்பட்டு செல்கிறார். அவரை சபாநாயகர் செல்வம் வழியனுப்பி வைக்கிறார்.மீண்டும் சபைக்கு திரும்பும் சபாநாயகர் செல்வம், கவர்னரின் உரையின் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை முன்மொழிவார். அத்துடன் இன்றயை சட்டசபை நிகழ்வுகள் முடிவடைக்கின்றன.நாளை 11ம் தேதி தொடர்ந்து எம்.எல்.ஏ.,க் கள் கவர்னருக்கு நன்றி தெரிவித்து பேசுகின்றனர். 12ம் தேதி நிதிதுறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி 2025-26ம் ஆண்டிற்கான பட்ஜெட்டினை தாக்கல் செய்கிறார்.கடந்தாண்டு ரூ.12,700 கோடிக்கு அரசு பட்ஜெட் தாக்கல் செய்தது. ஆனால் செலவினங்கள் அதிகரித்ததால் மறுமதிப்பீடு செய்து, ரூ.13,235 கோடிக்கு ஒப்புதல் கிடைத்து. எனவே புதுச்சேரி அரசின் 2025-26ம் ஆண்டு பட்ஜெட் ரூ.13,500 கோடியை தாண்டி முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்வார் என, எதிர்பார்க்கப்படுகிறது. புதிய அறிவிப்புகள்
அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. எனவே பட்ஜெட் தாக்கல் செய்யும்போது புதிய அறிவிப்புகளை முதல்வர் ரங்கசாமி வெளியிட உள்ளார். சட்டசபை தேர்தலை குறி வைத்து பல்வேறு புதிய திட்டங்களை முதல்வர் ரங்கசாமி அறிவிக்க உள்ளதால் பட்ஜெட்டின் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. எத்தனை நாட்கள்
தொடர்ந்து சட்டசபை எத்தனை நாட்கள் நடத்துவது என அலுவல் குழு கூடி முடிவு செய்கிறது. அதை தொடர்ந்து சட்டசபை கூட்டத் தொடர் நடக்கிறது. அமைச்சர்களின் துறைகள் ரீதியான மானிய கோரிக்கை மீதான விவாதம் நடக்கிறது. பலத்த போலீஸ் பாதுகாப்பு
சட்டசபை கூடுவதையொட்டி நகர பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சட்டசபை சுற்றிலும் உள்ள வீதிகளில் பேரிகார்டுகள் போடப்பட்டுள்ளன. அனுமதி அட்டை உள்ளவர்கள் மட்டுமே சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்பட உள்ளனர்.
பட்ஜெட் அனுமதி திக்... திக்...
புதுச்சேரி யூனியன் பிரதேசமாக இருப்பதால் மத்திய அரசின் ஒப்புதல் பெற்ற பிறகு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டும்.கடந்த மாதம் முதல்வர் தலைமையில் கூடிய குழு, பட்ஜெட்டினை இறுதி செய்து மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பியது. ஆனால் நேற்று இரவு ௯:30 மணியை தாண்டியும் ஒப்புதல் வரவில்லை. இதனால் அரசு அதிகாரிகள் திக்.. திக்.. மனநிலையிலேயே இருந்தனர். எந்நேரத்திலும் பட்ஜெட்டிற்கான அனுமதி வரும் என, காத்திருந்தனர்.