ஆட்டோ டிரைவர்கள் தர்ணா
பாகூர்: கிருமாம்பாக்கத்தில் தனியார் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை உள்ளது. இம்மருத்துவமனை நிர்வாகம், மருத்துவமனை வளாகத்திற்குள் ஆட்டோக்கள் வர தடை விதித்தது. இதுகுறித்து மருத்துவமனை எதிரில் இயங்கி வரும் ஆட்டோ ஸ்டேண்ட் நிர்வாகிகள், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு, நீதிபதி உத்தரவிட்டார். அதன்பேரில், மனுவை விசாரித்த கலெக்டர் குலோத்துங்கன், மருத்துவமனை வளாகத்திற்குள் ஆட்டோக்கள் செல்ல தற்போதுள்ள தடையை மறு பரீசலனை செய்து, பாகுபாடின்றி பொறுத்தமான வழிமுறைகளை உருவாக்கவும், ஆட்டோ டிரைவர்கள், பொதுமக்களுக்கு இடையூறு இன்றி, மருத்துவமனை நிர்வாகம் பிறப்பிக்கும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். இந்த உத்தரவை 30 நாளில் செயல்படுத்தி உத்தரவிட்டார். இந்நிலையில், நேற்று காலை நோயாளி ஒருவரை அழைத்து வர ஆட்டோ டிரைவர் ஒருவர், மருத்துவமனை வளாகத்திற்குள் ஆட்டோவுடன் செல்ல முயன்றபோது, நுழைவு வாயிலில் இருந்த காவலர்கள், ஆட்டோவை தடுத்து நிறுத்தினர். அதனைத் தொடர்ந்து ஆட்டோ டிரைவர் நித்யானந்தம் உள்ளிட்ட ஆட்டோ சங்க நிர்வாகிகள் தங்கள் குடும்பத்தினருடன், கிருமாம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று, கலெக்டரின் உத்தரவை செயல்படுத்த மறுக்கும், மருத்துவமனை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தர்ணாவில் ஈடுபட்டனர். பின், போலீசாரிடம் புகார் மனுவை கொடுத்து விட்டு கலைந்து சென்றனர். ஆட்டோ டிரைவர்களின் திடீர் தர்ணாவால் அப் பகுதியில் பரபரப்பு நிலவியது.