| ADDED : நவ 21, 2025 06:00 AM
புதுச்சேரி: லாஸ்பேட்டை கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் கிருஷ்ணன், 54; பகலில் ஆட்டோ ஓட்டி வரும் இவர், இரவில் பைக் சர்வீஸ் சென்டரில் செக்யூரிட்டி வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 15ம் தேதி இரவு ஆட்டோவை (கேஎல்.09-ஆர்-4389) சர்வீஸ் சென்டருக்கு வெளியே நிறுத்திவிட்டு வேலைக்கு சென்றார். மறுநாள் காலை பார்த்தபோது ஆட்டோவை காணவில்லை. புகாரின் பேரில், லாஸ் பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். இன்ஸ்பெக்டர் இனியன் தலைமையில், சப் இன்ஸ்பெக்டர்கள் குமார், திருநாவுகரசு மற்றும் போலீசார் நேற்று ரோந்து சென்ற போது, திருடுபோன ஆட்டோ அவ்வழியே வந்ததை கண்டு, மடக்கி நிறுத்தி விசாரித்தனர். அதில், ஆட்டோ ஓட்டி வந்தவர், கவிக்குயில் நகர், கல்லரை தெருவை சேர்ந்த செந்தில்நாதன், 42; என்பதும், ஆட்டோ டிரைவரான இவர், கடந்த 15ம் தேதி இரவு கருவடிகுப்பம் சாராயக்கடையில் குடித்துவிட்டு திரும்பியபோது, அங்கு கிருஷ்ணன் நிறுத்தியிருந்த ஆட்டோ சாவியுடன் இருந்ததால், அதனை திருடி வந்து, பெயிண்ட் அடித்து ஓட்டி வந்ததை ஒப்புக் கொண்டார். அதன்பேரில், செந்தில் நாதனை கைது செய்த போலீ சார், அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.