டிஜிட்டல் மயமாக்குதல் குறித்து விழிப்புணர்வு
அரியாங்குப்பம்: முருங்கப்பாக்கம் வருவாய் கிராமத்தில் நிலங்கள் மற்றும் இடங்களை புதிய தொழில்நுட்ப மூலம் டிஜிட்டல் மயமாக்குதல் தொடர்பாக விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. புதுச்சேரி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் நில அளவை, பதிவேடுகள் இயக்ககம் சார்பில், முருங்கப்பாக்கம் வருவாய் கிராமத்தில் பழைய நில அளவுகளுக்கு பதிலாக புதிய தொழில்நுட்பம் (செயற்கைகோள்) மூலம் புதிய நில அளவை எடுக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக தனியார் நிலங்கள், மனைகள், இடங்களில் உரிமையாளர்களின் ஆவணங்களை சரி பார்த்து நில அளவை மேம்படுத்தும் பணிக்காக விழிப்புணர்வு கூட்டம், முருங்கப்பாக்கம் திரவுபதி அம்மன் கோவிலில் நேற்று நடந்தது. நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை இயக்குனர் செந்தில்குமார் நில உரிமையாளர்கள் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் குறித்து விளக்கமளித்தார். கூட்டத்தில், அய்யப்பன் எம்.எல்.ஏ., துணை நில அளவை இயக்குனர் சகாயராஜ், நில நிர்வாக அதிகாரி சந்திரசேகர், தாசில்தார் குப்பன், துணை தாசில்தார் சிவமணி உட்பட பலர் பங்கேற்றனர். நில உரிமையாளர்கள் கிரையப் பத்திரம், பாகப்பிரிவினை, விடுதலை பத்திரம், தான பத்திரம் உள்ளிட்ட தங்கள் சொத்து தொடர்பான முக்கிய ஆவணங்களை சமர்ப்பி வேண்டும் என, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.