உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஜிப்மரில் ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்ட பதிவு... துவக்கம்: ஆதார் அட்டையுடன் போனால் உடனே வாங்கலாம்

ஜிப்மரில் ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்ட பதிவு... துவக்கம்: ஆதார் அட்டையுடன் போனால் உடனே வாங்கலாம்

புதுச்சேரி: ஜிப்மரில் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு ஆயுஷ்மான் பாரத் காப்பீடு அட்டைஇலவசமாக பதிவு செய்து எடுத்து தரப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயுஷ்மான் பாரத் - பிரதான் மந்திரி - ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டம் கடந்த 2018ம் ஆண்டு மத்திய அரசினால் துவங்கப்பட்டது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 2ம் மற்றும் 3ம் நிலை சிகிச்சைக்காக குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. மருத்துவமனையில் உள் நோயாளியாக 3 நாட்கள் வரையும் அதைத் தொடர்ந்து வெளியிலிருந்து 15 நாட்கள் வரையும் பரிசோதனைகள் மற்றும் மருந்துகள் உட்பட அனைத்து மருத்துவச் செலவுகளையும் இத்திட்டம் ஏற்கிறது. ஜிப்மரில் சிகிச்சை பெற வரும் நோயாளிகளுக்கு இந்த ஆயுஷ்மான் பாரத் சுகாதார திட்ட பயனாளர் அட்டையை இலவசமாக பதிவு செய்து வழங்கும் திட்டம் தற்போது துவக்கப்பட்டுள்ளது. இதற்காக, ஜிப்மரின் மருத்துவ பதிவேட்டு மையம், புற்றுநோய் சிகிச்சை பிரிவு, பெண்கள் குழந்தைகள் மருத்துவமனை, சிறப்பு சிகிச்சை பிரிவு உள்ளிட்ட இடங்களில் சிறப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஜிப்மருக்கு சிகிச்சைக்கு வரும் புதுச்சேரி, தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த நோயாளிகள் ஆதார் மற்றும் ஆதாரில் பதிவு செய்துள்ள மொபைல் எண்ணையும் ஓ.டி.பி., சரிபார்ப்பிற்காக எடுத்து வந்தால் 14 இலக்கம் கொண்ட இலவசமாக ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டு திட்டத்திற்கான பதிவு செய்வதோடு, பயனாளர் அட்டை பதிவிறக்கம் செய்து தரப்படும். பொது சேவை மையம் உள்பட பல்வேறு மையங்களில் இந்த ஆயுஷ்மான் பாரத் திட்டத்திற்கான அட்டை பதிவு செய்ய முடியும் என்றாலும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அப்படியே பதிவு செய்தாலும் உடனடியாக கார்டு கிடைப்பதில்லை. ஆனால் ஜிப்மரில் உடனடியாக காப்பீடு திட்டத்திற்கான கார்டு பதிவிறக்கம் செய்து கொடுக்கப்பட உள்ளது. என்ன காரணம் ஜிப்மருக்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு தனியாகவே மருத்துவ பதிவேடு பதிவு செய்யப்படுகிறது. ஆனால் அந்த மருத்துவ பதிவேட்டினை பலரும் எடுத்து வருவதில்லை. ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டம் பற்றியும் தெரியவில்லை. எனவே, இரண்டையும் ஒன்றிணைக்கும் வகையில் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனி ஜிப்மரில் சிகிச்சைக்காக செல்வோருடைய ஆதார் எண்ணை கொடுத்து மருத்துவ பதிவேடு பதிவு செய்யும்போது, அவர்களுடைய ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டமும் தெரிய வரும். இதன் மூலம் சில கட்டண மருத்துவ சிகிச்சையும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் வழியாக பெற்றுக்கொள்ள முடியும். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் இதுவரை புதுச்சேரி கடந்த 2019ம் ஆண்டு முதல் 18,285 பேரும், தமிழகத்தில் இருந்து 4,574 பேரும் பயனடைந்துள்ளனர். இந்த இலவச பதிவு மூலம் ஜிப்மரில் ஆயுஷ்மான் பாரத் திட்ட பயனாளிகள் எண்ணிக்கை பல மடங்காக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Narasimmabharathi S
அக் 24, 2025 14:20

மிகவும் முக்கியமான விஷயம் தான் இந்திய மக்கள் அனைவரும் இதைப் பயன்படுத்தி ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேண்டும் அரசுக்கு நன்றி


Narasimmabharathi S
அக் 24, 2025 14:16

மிக முக்கியமான ஒரு விஷயம் தான் எல்லா மக்களும் பயன்படுத்தி ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேண்டும் அரசுக்கு நன்றி