உடலுக்கு வலிமை சேர்க்கும் சமநிலை ஆசனங்கள்
'தினமலர்' விளையாட்டு பகுதியில் கடந்த 1ம் தேதி துவங்கிய 'யோகா கற்போம்' பகுதியில் சூரிய நமஸ்காரம் குறித்து கடந்த நான்கு வாரங்கள் பார்த்தோம். இனி, உடலுக்கு வலிமை மற்றும் ஆரோக்கியத்தை அளிக்கும் சமஸ்திதி அல்லது சமநிலை ஆசனங்கள் குறித்து பார்ப்போம்.யோக விஞ்ஞானத்தில் சமத்துவம், சமநிலை, 'ேஹாமியோஸ்டேசிஸ்' மிக முக்கியமானது. யோகா என்பதை ஆயிரக்கணக்கான வகைகளில் வரையறுத்தாலும், 'யோகம்' என்பது ஒருவரின் சமநிலையை தக்கவைக்கும் ஒரு கலை என்பதே சரியாகும்.யோகத்தின் விஞ்ஞானம் மனிதனை பல யுக்திகள் மூலம் உருவாக்குகிறது. அதாவது தன்னையறிதல், நன்நடத்தை, உணவு கட்டுப்பாடு, நேரான வாழ்க்கை முறை, உடல் மற்றும் சுவாச பயிற்சி, மனதை கட்டுப்படுத்தும் பயிற்சி மூலம் பெறலாம்.நடுநிலையை தேடுவோர், அவர் தன் உடலில் இருந்து தொடங்குவதே உத்தமம். இத்தத்துவத்தின் அடிப்படையில் தோன்றியதே 'ஹதயோகம்'. அதாவது ஒருவரின் மனதையும், உணர்வுகளையும் அடக்குவது, அவரது உடலை அடக்கிய பின்னரே முடியும்.நாம் சமநிலையில் இருக்க வேண்டும் என்றால், சமநிலை தரும் செயல்களை செய்ய வேண்டும். அதாவது மிதமான உணவு, வேலை, ஓய்வு சமநிலையில் இருக்க வேண்டும். உடலை சமநிலைப் படுத்துவதில் நாம் தேர்ச்சி பெற்றால், அதன் தாக்கம் தானாகவே மனதை எட்டும். அதாவது மனமும், உணர்வுகளும் தானாகவே சமநிலைபெறும்.ஹதயோகத்தின்படி மனித உடலில், கால், கை, தலை, தோள்பட்டை, மார்பு மற்றும் தண்டுவடம் என 6 முக்கிய சமநிலை மையங்கள் உள்ளன. உடலை சமநிலைப்படுத்துவதை அறிந்த மனிதன், எளிதில் தனது மனதையும், உணர்வுகளையும் சமநிலைப்படுத்தவிடுவான்.உடலுக்கும், மனதிற்கும் நல்ல உறுதியான சமநிலை பெறுவதற்கென்றே யோக வல்லுனர்களால் சில ஆசனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. சமநிலை தரும் நிலை மற்றும் நின்ற நிலையில் இருந்து செய்யப்படும் இந்த ஆசனங்கள் 'சமஸ்திதி' அல்லது உறுதியான சமநிலை ஆசனங்கள் எனப்படும்.இந்த ஆசனங்கள், உடலில் நெகிழ்வுத்தன்மையை கூட்டும், விழிப்புணர்வு அளிக்கும். ஒருமுகப்படுத்தும், வலிமையும், ஆரோக்கியமும் பெற்று உடலை அடக்கி சமநிலைப்பெற மிகச் சிறந்தது. இந்த ஆசனங்கள் நீண்ட சுவாசத்துடன் செய்வதால் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு கூடி ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.சமஸ்திதி ஆசனங்கள் அனைத்தும் சாதாரணமாக நின்ற நிலையில் செய்யக்கூடியவை. இந்த ஆசனங்கள் செய்யும் போது உடலை மேல்நோக்கி கொண்டு செல்லும்போது நீண்ட சுவாசத்தை உட்கொள்ள வேண்டும். உடலை கீழ்நோக்கி வரும்போது நீண்ட சுவாசத்தை வெளியிட வேண்டியது அவசியம். உடலை நீட்டி, சுருக்குவதால், உடலில் வளைவுத்தன்மை அதிகரிக்கும்.சமஸ்திதி ஆசனங்கள் பாத அங்குஷ்த ஆசனம், பாதஹஸ்த ஆசனம், திரிகோண ஆசனம், பரவிருத்தி திரிகோண ஆசனம், பர்ஷவகோண ஆசனம், வீராசனம் (முதல்நிலை), வீராசனம் (இரண்டாம் நிலை) பர்ஷவோட்டான ஆசனம், பாதோட்டான ஆசனம், அர்த்த் சந்திர ஆசனம், நடராஜ ஆசனம், ரதாசர்ய ஆசனம் அல்லது ஏகபாக ஆக்ர ஆசனம், வீராசனம் (மூன்றாம் நிலை) அல்லது ஏகபாத நிலை மற்றும் விருக் ஷாசனம் என 14 நிலைகள் உள்ளன.இந்த ஆசனங்களின் செயல்முறைகளை அடுத்த வாரத்தில் இருந்து காண்போம்...