புதுச்சேரி: முத்தியால்பேட்டை, ராமகிருஷ்ணா நகர், லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நடைபெற்று வரும் மார்கழி மாத உற்சவத்தில், 11ம் நாளான நேற்ற ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் நிகழ்த்திய உபன்யாசம்: பொதுவாகவே, இலக்கியங்களில் ஆசாரியனை மயிலுடன் ஒப்பிடுவர். புழுபூச்சிகள் மயிலின் அருகில் செல்லாதது போல, தீய எண்ணங்கள் ஆசார்யனை அண்டுவதில்லை. மயில் தனது இறகை அவ்வளவு சீக்கிரம் இழக்காது. அது போல, ஆசார்யனும், தனது ஞானச் சுற்றத்திலிருந்து வெளி வந்தாலும், தகுதியறிந்தே ஒருவனை சீடனாக ஏற்பார். மயிலுக்கு மேகம் பிடிக்கும். ஆசார்யனுக்கு கார்முகில் வண்ணனைப் பிடிக்கும். பக்தி, ஞானம், வைராக்கியம் என்ற மூன்றில் பக்திக்கே உயர்வான இடம் வைணவத்தில் வழங்கப்பட்டுள்ளது. கர்மம், ஞானம் இன்னபிற யோகங்கள் பெறப்படுபவை. ஆனால் பக்தி யோகம், தானாக வாய்க்க வேண்டும். நீர் வடிவம் இல்லாதது. எந்த கொள்கலனில் சேர்க்கப்படுகின்றதோ, அதற்கேற்ப வடிவம் பெறும். அதே போன்றே, நீர் வண்ணனாகிய நாரணனும் எதில் கொள்ளப்படுகின்றானோ அந்த பாத்திரத்தின் வடிவத்தைப் பெற்று விடுவான். மீனாக, ஆமையாக, வராஹமாக, நரசிம்மமாக, வாமனனாக, முடிவிலியாக, மனிதனாக, ராம, பலராம, பரசுராம, கண்ணனாக என்று ஏற்ற கலங்களை எதிர் கொண்டவன் நாராயணன். ஆகவே தான் எம்பெருமானை முகில் வண்ணன் என்று கூறியுள்ளார். நீருக்குள் எதுவும் அடங்கி விடும். அதே போல் புண்யாத்மா - பாபாத்மா என்று பேதம் இல்லாமல் சேதன அசேதனங்கள் அனைத்தும், அவரவர் விதிவகை நாராயணனிடம் லயமாகி விடுவர். வினைப் பயனால், அது ஒரு பிறவியோ ஓராயிரம் பிறவியோ. இறுதியில் லயமாவது ஸ்ரீமந் நாரயணனிடம் தான். எனவே கண்ணனை நினையாத மனமும், கண்ணனுக்காக உருகாத உள்ளமும், கண்ணனுக்காக ஒழிக்காத ஆசையும் எதற்கு? என்று தெளிந்து, நம் உள்ளத்தில் கொண்டால், வண்ணன் நம் மனமாகிய கோவிலில் குடியேறுவான்' என்றார்.
உபன்யாசம் நேரம்
மார்கழி மாத உபன்யாசம் வரும் 14ம் தேதி வரை தினசரி காலை 6:00 முதல் 7:00 மணி வரை நடைபெறும்.