பாரதியார் கிராம வங்கி விழிப்புணர்வு நடைபயணம்
புதுச்சேரி: புதுச்சேரி பாரதியார் கிராம வங்கி சார்பில், புதிய வைப்பு நிதி திட்டம் குறித்து ஊழியர்கள் பிரசார நடைபயணம் சென்றனர். புதுச்சேரி பாரதியார் கிராம வங்கியின் புதிய திட்டமாக 'புதுவை வசந்தம்' என்ற சிறப்பு வைப்பு நிதி திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டம் குறித்த பயன்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், வங்கி ஊழியர்கள் பிரசார நடைபயணம் சென்றனர். வங்கி அலுவலகத்தில் இருந்து துவங்கிய நடைபயணம், லெனின் வீதி, திருவள்ளுவர் வீதி வழியாக சென்று, கடற்கரை சாலையில் முடி வடைந்தது. இதில், வங்கி தலைவர் ரத்தினவேல், பொது மேலாளர் கணபதி உட்பட ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். இறுதியாக, கடற்கரை சாலையில் உள்ள பொதுமக்களுக்கு திட்ட பயன்கள் குறித்த துண்டு பிரசூரங்களை ஊழியர்கள் வழங்கினர். 'புதுவை வசந்தம்' சிறப்பு வைப்பு நிதி திட்டம் மூலம் அரசு வங்கிகளிலேயே அதிகபட்ச வட்டியாக மூத்த குடிமக்களுக்கு 7.50 சதவீதம் வட்டியும், மிக மூத்த குடிமக்களுக்கு 7.75 சதவீதமும், மற்றவர்களுக்கு 7 சதவீத வட்டி 444 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த திட்டம் வரும் செப்., 30ம் தேதி வரை அமலில் உள்ளதாக, வங்கி தலைவர் ரத்தினவேல் தெரிவித்தார்.