ரூ.1.18 கோடி செலவில் விளையாட்டு திடலுக்கு பூமி பூஜை கிடப்பில் போடப்பட்டதால் மாணவர்கள் பாதிப் பு
நெட்டப்பாக்கம்,: பண்டசோழநல்லுார் அரசு நடுநிலைப் பள்ளிக்கு விளையாட்டு திடல் அமைக்கும் பணி பூமி பூஜையோடு நிற்பதால் மாணவர்கள் அவதியடைந்து வருகின்றனர்.நெட்டப்பாக்கம் அடுத்த பண்டசோழநல்லுார் கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. எல்.கே.ஜி., முதல் எட்டாம் வகுப்பு வரை இயங்கும் இப்பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு திடல் இல்லாததால், விளையாட்டு பயிற்சி மேற்கொள்ள முடியாமல் மாணவர்கள் அவதியடைந்து வந்தனர். இப்பள்ளிக்கு விளையாட்டு திடல் அமைக்க வேண்டும் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் தொடர்ந்து தொகுதி எம்.எல்.ஏ., ராஜவேலுவிடம் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து எம்.எல்.ஏ., பள்ளிக்கல்வித்துறைக்கு விளையாட்டு திடல் அமைத்து தர வேண்டும் என தொடர்ந்து கேட்டு வந்தார். இதையடுத்து பள்ளி கல்வித்துறை மூலம் கடந்தாண்டு பள்ளிக்கு எதிரில் விளையாட்டு திடல் அமைக்க 5 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது. அங்கு கடந்த 4 மாதங்களுக்கு முன் ரூ. 1 கோடியே 18 லட்சம் செலவில் விளையாட்டு திடல் மற்றும் சுற்றுச்சுவர் அமைக்க பூமி பூஜை போடப்பட்டது. பூமி பூஜை செய்யப்பட்டு பல மாதங்கள் ஆகியும் இதுவரை பணி ஆரம்பிக்கப்படவில்லை. இதனால் பள்ளி மாணவர்கள் தற்காலிகமாக விளையாட்டு திடல் அமைத்து ஆபத்தான முறையில் விளையாடி வருகின்றனர். அந்த தற்காலிக விளையாட்டு திடல் சுற்றியும் புதர் மண்டி கிடப்பதால் விஷவண்டுகள் நடமாட்டத்தால் மாணவர்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே மாணவர்களின் நலன் கருதி விளையாட்டு திடலை விரைந்து கட்டி மாணவர்களின் பயண்பாட்டிற்கு கொண்டு வர அரசு துாரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.