கூட்டணி தர்மத்தை மீறும் பா.ஜ., அ.தி.மு.க., அன்பழகன் குற்றச்சாட்டு
புதுச்சேரி : சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கூட்டணி தர்மத்தை மீறி, பா.ஜ.,வினர் செய்து வரும் செயல் தவறானது என, அ.தி.மு.க., குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் கூறியதாவது: புதுச்சேரியில் 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு நீட் அல்லாத அனைத்து படிப்புக்களிலும் 10 சதவீத இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்டு அரசாணை வெளியிட்பட்டுள்ளது. அ.தி.மு.க.,வின் தொடர் கோரிக்கையை ஏற்று இடஒதுக்கீடு வழங்கியுள்ளனர். அதேபோல், மருத்துவ கல்வியிலும், அரசு பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டை பெற 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசு பள்ளி மாணவர்கள் தகுதியுடையவர்கள் என முதல்வர் அறிவிக்க வேண்டும். சில தொகுதிகளில், கூட்டணி தர்மத்தை மீறி பல்வேறு சம்பவங்கள் நடப்பது தவறானது. பா.ஜ., அமைச்சராக இருக்கக்கூடிய ஜான்குமாரின் தொகுதி கா மராஜ் நகர். ஆனால் அவர் அ.தி.மு.க., பலமுறை வெற்றி பெற்ற தொகுதியான முதலியார்பேட்டையில், நிற்கப்போவதாக கூறி, நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். அதேபோல், ராஜ்பவன் தொகுதியில் என்.ஆர்.காங்., அமைச்சர் லட்சுமிநாராயணன் உள்ளார். அங்கு, பா.ஜ., சார்பில், நிற்க போவதாக அக்கட்சி தலைவர் ராமலிங்கம் கூறி, பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். தேர்தல் நெருங்கும் நிலையில் இது கூட்டணியை பலகீனப்படுத்தும் செயலாகும். இது சம்பந்தமாக தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை ஏற்றுள்ள முதல்வர் ரங்கசாமி, கூட்டணி கட்சி தலைவர்களை அழைத்து பேசுவது அவசியமாகும். இவ்வாறு அவர், தெரிவித்தார்.