உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பா.ஜ., அமைச்சர் - எம்.எல்.ஏ., மோதல் முற்றுகிறது! புதுச்சேரி அரசியலில் தொடரும் பரபரப்பு

பா.ஜ., அமைச்சர் - எம்.எல்.ஏ., மோதல் முற்றுகிறது! புதுச்சேரி அரசியலில் தொடரும் பரபரப்பு

புதுச்சேரி; ஆட்சியில் அங்கம் வகித்து வரும் பா.ஜ.,வை சேர்ந்த அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ., இடையே ஏற்பட்டுள்ள மோதல் காரணமாகபுதுச்சேரி அரசியலில் பரபரப்பு தொடர்ந்து நிலவி வருகிறது. புதுச்சேரி அரசில் அங்கம் வகித்து வரும் பா.ஜ.,வை சேர்ந்த சாய் சரவணன்குமார், அரசுக்கு எதிராக கடந்த 6ம் தேதி சட்டசபையில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்தார். அதன்படி 6ம் தேதி காலை சட்டசபைக்கு வந்த அவர், நிருபர்களிடம், புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. தினமும் கொலை நடக்கிறது. என்கவுன்டர் செய்யாதது ஏன். கல்வித்துறையில் இயக்குநர் இல்லை. இதில் எல்லாம் உள்துறை அமைச்சர் கவனம் செலுத்துவதில்லை. அமைச்சரவையில் ஆதிதிராவிடர்களுக்கு பிரதிநிதித்து இல்லை. கரசூர் தொழிற்பேட்டையில் இடம் ஒதுக்கீட்டு குழுவில் தொகுதி எம்.எல்.ஏ.,வான என்னையும் உறுப்பினராக சேர்க்க வேண்டும். இந்த கோரிக்கைகளை 15 நாளில் நிறைவேற்றாவிட்டால், சிறை நிறப்பும் போராட்டம் நடத்துவேன் என்றார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் நமச்சிவாயம், 'என்கவுண்டர்' செய்வதில் நடைமுறை சிக்கல் உள்ளது. கல்வித்துறையில் இயக்குநர் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தொழிற்பேட்டை இடம் ஒதுக்கீடு குழுவில் அதிகாரிகள் மட்டுமே உள்ளனர். மக்கள் பிரதிநிதிகள் எவரும் இல்லை என்றார். இந்நிலையில் நேற்று சட்டசபைக்கு வந்த சாய் சரவணன்குமார், நான் கூறிய புகார்களுக்கு, உள்துறை அமைச்சர் அளித்த பதில் திருப்தியில்லை. அவர் ஒன்றும் காங்., அமைச்சர் அல்ல. ஒரு கன்னத்தில் அறைந்தால், மறு கன்னத்தை காட்ட. கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என்று சொல்லக்கூடிய பிரதமர் மோடியின் அமைச்சர் என்பதை மனதில் வைத்து பேச வேண்டும். 'என்கவுன்டர்' சுலபம் கிடையாது என அதிகாரிகள் கூறுவதையே, கிளிப்பிள்ளை போல் கூறுகிறார். பிற மாநிலங்களில் துப்பாக்கிகள் சுடும்போது புதுச்சேரியில் மட்டும் சுடாதா? குற்றம் செய்வோரை, மோடி அரசு இரும்பு கரம் கொண்டு அடக்கும். துப்பாக்கி சூடும் என்று பேட்டி அளித்திருந்தால் பெருமைபட்டிருப்பேன். அமைச்சருக்கு புத்தி கூர்மை அதிகமாக இருக்க வேண்டும். ஒரு துறை இயக்குநர் ஓய்வு பெறுவதற்கு முன்பே, அதற்குண்டான நபரை நியமித்திருக்க வேண்டும் என்றார். இதுகுறித்து சட்டம் ஒழுங்கு ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் நமச்சிவாயத்திடம் கேட்டபோது, அமைச்சர் பதவி இல்லாத விரக்தியில் சாய் சரவணன்குமார் பேசிக் கொண்டுள்ளார். என்கவுன்டர் எனும் போது, அவர் ஒரு அமைச்சராக இருந்தவர், சட்டத் திட்டங்கள் தெரியனும். கோர்ட், மனித உரிமை ஆணையம் உள்ளது. யாரையும் நினைத்தவுடன் சுட்டு தள்ள முடியாது என்றார். பா.ஜ.,வை சேர்ந்த அமைச்சரும், எம்.எல்.ஏ.,வும் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி வருவது, அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம் நேற்று காலை 11:45 மணிக்கு சட்டசபையில், சபாநாயகர் செல்வத்தை சந்தித்தார். பின்னர் இருவரும் தனியாக ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து மதியம் 1:15 மணிக்கு இருவரும், ராஜ்நிவாஸ் சென்றனர். அவரை தொடர்ந்து உள்துறை அமைச்சர் நமச்சிவாயமும் ராஜ்நிவாஸ் சென்றார். மூவரும் சுமார் ஒரு மணி நேரம் கவர்னருடன் சந்தித்து பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை