வாரிய தலைவர் விவகாரம் மீண்டும் விஸ்வரூபம்: ஆளும் கூட்டணியில் கடும் அதிருப்தி
புதுச்சேரி: ஆளும்கட்சி கூட்டணிக்குள் நீரு பூத்த நெருப்பாக கனன்று கொண்டிருந்த வாரியத் தலைவர் பதவிவிவகாரத்தால் இரு கட்சியினரும் கடும் அதிருப்தியில் உள்ளனர்.புதுச்சேரியில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளில், என்.ஆர்.காங்., -பா.ஜ., கூட்டணி 16 இடங்களிலும், தி.மு.க.,- காங்., கூட்டணி 8 தொகுதிகளிலும், சுயேச்சை 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்றனர். இவர்களில் சுயேச்சை எம்.எல்.ஏ.,களில் 3 பேர் பா.ஜ.,விற்கு ஆதரவு அளித்து வருகின்றனர். மேலும், பா.ஜ.,வில் மூன்று பேர் நியமன எம்.எல்.ஏ.,க்களாக நியமிக்கப்பட்டனர். இதனால், சட்டசபையில் தற்போது பா.ஜ.,விற்கு 12 எம். எல்.ஏ.,க்கள் உள்ளனர். இவர்களில் பா.ஜ.,விடம் சபாநாயகர், இரு அமைச்சர்கள் மற்றும் முதல்வரின் பாராளுமன்ற செயலர் பதவிகள் உள்ளன. மற்றவர்கள், வாரியத் தலைவர் பதவியை பெற்றிட முயற்சித்து வந்தனர். ஆனால், முதல்வர் ரங்கசாமி, நிதி நிலையை காரணம் காட்டி வாரியத் தலைவர் பதவியை வழங்காமல் காலம் கடத்தி வந்து கொண்டுள்ளார். இந்நிலையில், கடந்த 2021ம் ஆண்டு இறுதியில், அமைச்சர் நமச்சிவாயத்திற்கு மட்டும் பிப்டிக் சேர்மன் பதவி வழங்கப்பட்டது. இது இரு கட்சியினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. உச்சபட்சமாக பா.ஜ., ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் அதிருப்தியை பகிரங்கமாக கட்சி தலைமைக்கு தெரியப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து பா.ஜ., மேலிட பொறுப்பாளர் கடந்த 2022ம் ஆண்டு பா.ஜ., மற்றும் பா.ஜ., ஆதரவு எம்.எல்.ஏ.,க்களை சந்தித்து பேசியதோடு, முதல்வரையும் சந்தித்து பேசினார். அப்போது, பா.ஜ.,வை சேர்ந்த இரு அமைச்சர்களின் கீழ் உள்ள வாரியங்களுக்கு நீங்களே தலைவர்களை நியமித்து கொள்ளுங்கள் என்றார்.அதில், பா.ஜ.,வினர் மகிழ்ச்சி அடைந்தனர். அந்த பதவிகளை பிடிக்க பா.ஜ.,விற்குள் கடும் போட்டா போட்டி நிலவியது. அதன் எதிரொலியாக பா.ஜ., எம்.எல்.ஏ.,க்களே அமைச்சர் பதவியை சுழற்சி முறையில் வழங்க வேண்டும். வாரியத் தலைவர் பதவி வழங்க வேண்டும் என போர்க்கொடி உயர்த்தினர். அவர்களை, கட்சி தலைமை நிர்வாகிகள் சமாதானப்படுத்தினர். வாரிய தலைவர் பதவி வழங்கினால், மேலும் சிக்கலாகும் என்பதால், அதனை அப்படியே கிடப்பில் போட்டுள்ளனர். ஆட்சி முடிய இன்னும் ஓராண்டே உள்ள நிலையில் கூட ஆட்சியில் உள்ளவர்கள், அதிகாரத்தை பகிர்ந்தளிக்க மனமின்றி உள்ளனரே என இரு கட்சியினரும் புலம்பிக் கொண்டுள்ளனர்.இதனை அறிந்த என்.ஆர்.காங்., தலைமை, அதிருப்தியில் உள்ள நிர்வாகிகளை சமதானம் செய்யும் வகையில், கட்சி துவங்கி 14 ஆண்டுக்கு பிறகு முதன் முறையாக தொண்டர்களுக்கு பொறுப்பு வழங்கி குஷிப்படுத்தி வருகிறது.
கசப்பான அனுபவங்கள்
முதல்வர் ரங்கசாமி, கடந்தமுறை ஆட்சிக்கு வந்தபோது, கட்சியினரை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதற்காக 20க்கும் மேற்பட்டவர்களுக்கு வாரியத் தலைவர் பதவி வழங்கினார். பதவிக்கு வந்தவர்கள், தங்கள் வாரியத்தை வளர்ச்சி பாதைக்கான திட்டங்களை செயல்படுத்துவதில் ஆர்வம் காட்டாமல், ஆடம்பர வாழ்க்கையில் ஆர்வம் காட்டினர். இதனால், பாசிக், பாப்ஸ்கோ, ஏ.எப்.டி., போன்ற பல வாரியங்கள் இழுத்து மூடப்பட்டுள்ளது.மேலும், ஆட்சி அதிகாரத்தின் போது வாரியத் தலைவர் பதவியில் இருந்த பலரும், பதவி பறிபோனதும் காங்., கட்சிக்கு தாவினர். இதுபோன்ற கசப்பான காரணங்களால், முதல்வர் ரங்கசாமி இம்முறை வாரியத் தலைவர் பதவி விவகாரத்தில் ஆர்வம் காட்டாமல் மவுனம் காத்து வருகிறார்.