நோணாங்குப்பத்தில் படகு சவாரி நிறுத்தம்
அரியாங்குப்பம்: வீடூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீர், நோணாங்குப்பம் சுண்ணாம்பாற்றில், சென்றதை அடுத்து, படகு சவாரி நிறுத்தப்பட்டது. நோணாங்குப்பத்தில், சுற்றுலா வளர்ச்சி கழகம் மூலம், படகு குழாம் இயங்கி வருகிறது. இங்கு, வெளி மாநிலங்களில் இருந்துசுற்றுலாப் பயணிகள், படகு சவாரி செய்து, பாரடைஸ் பீச்சிற்கு சென்று வருவர். வடகிழக்கு பருவ மழை துவங்கியதை அடுத்து, கடந்த இரண்டு நாட்களுக்கு முன், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் வீடூர் அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டு, சங்கராபரணி ஆற்றில் விடப்பட்டது. இந்த உபரி நீர், நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு வழியாக கடலுக்கு செல்கிறது. தண்ணீர் அதிகமாக செல்வதால், பாதுகாப்பு கருதி, நோணாங்குப்பம் படகு குழாமில், படகு சவாரி நேற்று நிறுத்தப்பட்டது. படகுகள் ஆற்றில் அடித்து செல்லாமல், இருக்க கயிறு மூலம் பாதுகாப்பாக கட்டி வைக்கப்பட்டுள்ளது. படகுகள் இயக்காததால், வெளியூரில் இருந்து வந்த சுற்றலாப் பயணிகள் படகு சவாரி செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.