வணிக உரிமம் புதுப்பிக்க முகாம் நகராட்சி ஆணையர் அறிவிப்பு
புதுச்சேரி: புதுச்சேரி நகராட்சியில் வணிக உரிமம் புதுப்பித்து கொள்ள சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து நகராட்சி ஆணையர் கந்தசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:புதுச்சேரி நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வணிக உரிமம் பெற்று தொழில் செய்து வரும் சிறு மற்றும் குறு நிறுவனங்கள், வியாபாரிகள் வரும் 2025-26ம் ஆண்டிற்கான வணிக உரிமத்தை வரும் 28ம் தேதிக்கு முன்பாக புதுப்பித்து, 25 சதவீத காலதாமத கட்டணத்தை தவிர்த்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். மேலும், வணிக உரிமம் இல்லாமல் வணிகம் செய்பவர்கள் கண்டறியப்பட்டால் நகராட்சி மூலம் உடனடியாக மூடி சீல் வைக்கப்படும். எனவே, வியாபாரிகள் உடனடியாக வர்த்தக உரிமம் பெற்று, புதுப்பித்தல் செய்து கொண்டு, வியாபாரம், தொழில் செய்வதை தடை செய்யும் நடவடிக்கையை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.வணிகர்கள் மற்றும் தொழில் செய்பவர்கள் நலன் கருதி, புதுச்சேரி நகராட்சி வருவாய் பிரிவு-2 மூலம் சிறப்பு முகாம் ஏறபாடு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, வரும் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் புதுச்சேரி குபேர் அங்காடியிலும், 21ம் தேதி புதுச்சேரி, திருவள்ளுவர் சாலை வியாபாரிகள் நலசங்க அலுவலகத்திலும், 25ம் தேதி முத்தியால்பேட்டை வணிகர் சங்கத்திலும், சிறப்பு முகாம்கள் காலை 9:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை நடக்கிறது.இந்த வாய்ப்பினை வணிகர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.