அரசு ஊழியரிடம் தகராறு சகோதரர்கள் மீது வழக்கு
புதுச்சேரி : முத்தியால்பேட்டையில் அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக சகோதரர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.முத்தியால்பேட்டை, காட்டாமணிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் பழனி. இவர் தனது தம்பி மணியுடன் இணைந்து, மாடுகளை வளர்த்து வருகிறார். இவர்கள், மாடுகளை முறையாக பராமரிக்காமல், வீதிகளில் திரிய விட்டதால், வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் சிரமத்திற்குள்ளாகினர்.இதையடுத்து, புதுச்சேரி நகராட்சி சுகாதார ஆய்வாளர் சேகர் தலைமையிலான ஊழியர்கள், வீதியில் சுற்றி திரிந்த மாடுகளை பிடிக்க சென்றனர். அப்போது, பழனி, மணி ஆகியோர் மாடுகளை பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சுகாதார ஆய்வாளர் சேகரை தகாத வார்த்தைகளால் திட்டினர். இதுகுறித்து ஆய்வாளர் சேகர் அளித்த புகாரின் பேரில், பழனி, மணி ஆகியோர் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.