போலி உயில் தயாரித்து மோசடி 5 பேர் மீது வழக்குப் பதிவு
புதுச்சேரி: போலி உயில் தயாரித்து மோசடியில் ஈடுபட்ட தந்தை, மகன்கள் உட்பட 5 பேர் மீது சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.புதுச்சேரியை சேர்ந்த சுந்தரமூர்த்தி, 60, என்பவர், தனது தந்தை பொன்னாசி என்பவருக்கு சொந்தமான ரூ.1.5 கோடி மதிப்பிலான சொத்தை போலி உயில் பத்திரம் தயார் செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளதாக பாகூர் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு புகார் வந்தது.இதையடுத்து, பாகூர் சார் பதிவாளர் ஜெயச்சந்திரன் உண்மையை கண்டறியும் சோதனையாக, அலுவலக பதிவேடுகளை ஆய்வு செய்தபோது பொன்னாசியின் கைரேகையும், அவர் எழுதிய உயிலில் உள்ள கைரேகையும் வித்தியாசமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.இதுகுறித்து சார் பதிவாளர் ஜெயச்சந்திரன் சி.பி.சி.ஐ.டி., போலீசில் கடந்த 18ம் தேதி அளித்த புகாரின் பேரில் சுந்தரமூர்த்தி, அவரது மகன்கள் காந்திராஜ் 35, செந்தில்குமரன் 32, ராமகிருஷ்ணன் 31, அழகானந்தம் 30, உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.மேலும், வழக்கில் அரசு ஆவணங்களில் திருத்தம் செய்ய அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் யார் என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.