சென்டாக் மருத்துவ படிப்பிற்கான இறுதி தரவரிசை பட்டியல் வெளியீடு ஜிப்மரில் சீட் ஒதுக்கப்பட்ட 57 மாணவர்கள் அதிரடி நீக்கம்
புதுச்சேரி : ஜிப்மரில் சீட் ஒதுக்கப்பட்ட 57 மருத்துவ மாணவர்களின் பெயர் பட்டியலை சென்டாக் நீக்கியுள்ளது. எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவம், ஆயுர்வேதம் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு ஆட்சேபனைகள் பெற்ற சென்டாக் இறுதி தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், அரசு ஒதுக்கீட்டில்1,585 மாணவர்கள் இடம் பெற்றுள்ளனர்.இட ஒதுக்கீடு வாரியாக பொது பிரிவு-465, எம்.பி.சி.,-410, முஸ்லீம்-55, மீனவர்-77, எஸ்.சி., -241, பி.டி., -2, இ.டபுள்யூ.எஸ்.,-17, முன்னாள் ராணுவ வீரர் வாரிசு-18, விடுதலை போராட்ட வீரர்-45, மாற்றுத்திறனாளி-3, விடுதலை போராட்ட வீரர்-80 பேர்இட பெற்றுள்ளனர். அரசு பள்ளி மாணவர்கள் சென்டாக் அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ தரவரிசை பட்டியலை தனியாக வெளியிட்டது. இதில், அரசு பள்ளி மாணவர்கள் ஒட்டுமொத்தமாகவே 29 பேர் மட்டுமே தகுதி பெற்றுள்ளதால் மருத்துவ இடங்களை நிரப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இறுதி தரவரிசை பட்டியலில் அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது. கூடுதலாக 7 மாணவர்கள் இடம் பிடித்துள்ளனர். நிர்வாக இடங்கள் தனியார் மருத்துவ கல்லுாரிகளின் நிர்வாக இடங்களுக்கான இறுதி தரவரிசை பட்டியலில் 5,461 பேர் விண்ணப்பித்து இடம் பிடித்துள்ளனர். தெலுங்கு மொழி பேசும் மாணவர்களுக்கான நிர்வாக இடங்களுக்கு 15 பேரும், கிறிஸ்துவ நிர்வாக இடங்களுக்கு 22 பேரும் விண்ணப்பித்துள்ளனர். என்.ஆர்.ஐ., இடங்களுக்கு 333 பேர், என்.ஆர்.ஐ., கால்நடை படிப்பு இடங்களுக்கு 258 பேர் விண்ணப்பித்து இறுதி தரவரிசை பட்டியலில் உயர் கல்வி வாய்ப்பிற்காக காத்திருக்கின்றனர். 57 மாணவர்கள் நீக்கம் மருத்துவ படிப்பினை பொருத்தவரைபுதுச்சேரி மாணவர்கள், ஜிப்மர், சென்டாக்கில் சேர்த்து விண்ணப்பிக்கின்றனர். ஜிப்மரில் சீட் ஒதுக்கப்பட்ட மாணவர்கள் சென்டாக் பட்டியலில் இருந்து ஆண்டுதோறும் நீக்கப்பட்டு வருகின்றனர். இந்தாண்டு ஜிப்மரில் சீட் ஒதுக்கப்பட்ட 57 மாணவர்களை சென்டாக் இறுதி தரவரிசை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பெயர் பட்டியல் சென்டாக் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சென்டாக் இறுதி தரவரிசை பட்டியலில் நீக்கம் செய்யப்பட்ட இம்மாணவர்கள் சென்டாக் கவுன்சிலிங்கில் பங்கேற்க விருப்பப்பட்டால் 1 லட்சம் ரூபாய் இன்று 14ம் தேதி காலை 11:00 மணிக்குள் டிபாசிஸ்ட் செலுத்த வேண்டும் என, சென்டாக் அறிவுறுத்தியுள்ளது.