புதுச்சேரி,:புதுச்சேரி ரெஸ்டோ பாரில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட தகராறில், சென்னை தனியார் கல்லுாரி மாணவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். சிவகங்கையை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர் மீனாட்சி சுந்தரபாண்டியன். இவரது மகன் மோஷிக் சண்முகபிரியன், 22; சென்னை, எஸ்.ஆர்.எம்., கல்லுாரியில் விஷூவல் கம்யூனிகேஷன் படித்து வந்தார். இவர், தன் நண்பரான அதே கல்லுாரியில் எம்.எஸ்சி., படித்து வரும் மதுரை மாவட்டம், மேலுாரை சேர்ந்த ஷாஜன், 23, என்பவரின் பிறந்தநாளை கொண்டாட, தன் நண்பர்கள், 10க்கும் மேற்பட்டோருடன் நேற்று முன்தினம் புதுச்சேரி வந்தார். புதுச்சேரி, மிஷன் வீதியில் உள்ள ஓ.எம்.ஜி., ரெஸ்டோ பாரில், மது அருந்திவிட்டு பிறந்தநாள் கொண்டாடினர். ரெஸ்டோ பார் மூடுவதற்கான நேரத்தை தாண்டி, 1:30 மணி வரை தொடர்ந்ததால், பார் ஊழியர்கள், பவுன்சர்கள், அவர்களை வெளியே செல்லும்படி கூறினர். இதில், ஆத்திரமடைந்த மாணவர்கள், பார் உரிமையாளர் ராஜ்குமார், பவுன்சர்கள், ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த பார் ஊழியர் முத்தியால்பேட்டையை சேர்ந்த அசோக்ராஜ், மோஷிக் சண்முகபிரியன் முதுகில் கத்தியால் குத்தினார். தடுக்க வந்த ஷாஜனையும் இடுப்பில் குத்தினார். இதில், காயமடைந்த இருவரையும், பெரியக்கடை போலீசார் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு, மோஷிக் சண்முகபிரியன் இறந்தார். காயமடைந்த ஷாஜனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. விசாரணையில், மோஷிக் சண்முகப்பிரியன், குடிப்பழக்கம் இல்லாதவர் என்பதும், வீட்டிற்கு ஒரே மகன் என்பதும் தெரிந்தது. போதையில் தகராறில் ஈடுபட்ட தன் நண்பர்களை சமதானம் செய்ய முயன்றதில், பார் ஊழியரால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார் என்பதும் தெரிந்தது. இந்த சம்பவம் தொடர்பாக, அசோக்ராஜ் உட்பட ஆறு பேரை போலீசார் கைது செய் து விசாரிக்கின்றனர்.