| ADDED : மார் 16, 2024 11:15 PM
சுற்றுலா கப்பல் சேவைக்காக புதுச்சேரி, உப்பளம் துறைமுகத்தில், சென்னை துறைமுக சேர்மன் ஆய்வு செய்தார்.மத்திய கப்பல் போக்குவரத்து துறை உள்நாட்டு துறைமுகங்களை மையப்படுத்தி, கடல் சுற்றுலாக்களை மேம்படுத்தும் விதமாக பல்வேறு செயல் திட்டங்களை கொண்டு வர உள்ளது.அதையொட்டி, விசாகப்பட்டினம் - சென்னை - புதுச்சேரிக்கு சுற்றுலாப் பயணிகள் கப்பல் இயக்கப்படவுள்ளது. இதில் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து புறப்படும் சுற்றுலாப் பயணிகள் கப்பல் சென்னை துறைமுகத்திற்கு வருகிறது. கப்பலில் வரும் பயணிகள் சென்னையை சுற்றிப் பார்த்த பின்பு அதே கப்பல் அங்கிருந்து கிளம்பி புதுச்சேரி துறைமுகத்திற்கு வருகிறது.உப்பளம் துறைமுகத்தில் பெரிய அளவு கப்பல்கள் வர முடியாததால் தேங்காய் திட்டு முகத்துவாரம் அருகில் உள்ள கடல் பகுதியில் பயணிகள் கப்பல் நடுக்கடலில் நிறுத்தப் படுகிறது. கப்பலில் வரும் சுற்றுலாப் பயணிகளை விசைப்படகு மூலம் உப்பளம் துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டு புதுச்சேரி சுற்றுலா தளங்களை பார்க்கும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளது.இந்த திட்டத்திற்காக சென்னை துறைமுக சேர்மன் சுனில் பாலிவால், புதுச்சேரி, உப்பளம் துறைமுகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன், பார்வையிட்டு, கப்பல் நிறுத்தப்பட உள்ள கடல் பகுதியை விசைப்படகில் சென்று ஆய்வு செய்தார்.தொடர்ந்து புதுச்சேரி துறைமுக அதிகாரிகளுடன் ஆலோசனை செய்துவிட்டு புறப்பட்டு சென்றார். புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கப்பலில் செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.