உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரசு ஊழியர்களுக்கு முதல்வர் ரங்கசாமி தாராளம்:பணி நீக்க ஊழியர்களுக்கு மீண்டும் வேலை புதுச்சேரி மாநகராட்சியாக தரம் உயர்கிறது

அரசு ஊழியர்களுக்கு முதல்வர் ரங்கசாமி தாராளம்:பணி நீக்க ஊழியர்களுக்கு மீண்டும் வேலை புதுச்சேரி மாநகராட்சியாக தரம் உயர்கிறது

புதுச்சேரி: சட்டசபை கூட்டத் தொடரில் பட்ஜெட் மற்றும் மானியக் கோரிக்கை மீதான எம்.எல்.ஏ.,க்களின் விவாதத்திற்கு நேற்று முதல்வர் ரங்கசாமி பதில் அளித்து பேசுகையில் அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.புதுச்சேரி பட்ஜெட் கூட்டத் தொடருக்கு சட்டசபை கூடும் தேதி அறிவிப்பு வெளியான முதல் அரசு ஊழியர்கள் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நேற்று வரை நடத்தி வந்தனர். இதனால், சட்டசபை அருகே உள்ள ஆம்பூர் சாலை, செஞ்சி சாலை, மிஷன் வீதி மற்றும் ஜென்ம ராக்கினி ஆலய வளாக பகுதிகளில் கடந்த இரு வாரமாக போராட்ட களமாகவே காணப்பட்டது.இந்நிலையில் நேற்று எம்.எல்.ஏ.,க்களின் விவாதங்களுக்கு பதில் அளித்து பேசிய முதல்வர் ரங்கசாமி, அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவிப்புகளை வெளியிட்டார்.சட்டசபையில் பட்ஜெட் மற்றும் மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தில் எம்.எல்.ஏ.,க்களின் கேள்விகளுக்கு முதல்வர் ரங்கசாமி பதில் அளித்து பேசியதாவது:பட்ஜெட் மற்றும் மானிய கோரிக்கைகள் மீது எம்.எல்.ஏ.,க்கள் கூறிய கருத்துகளை ஏற்று செயல்படுத்த அரசு தயாராக உள்ளது. நிர்வாகம் எவ்வாறு உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். நிர்வாக சீர்த்திருத்தங்களை அரசு மேற்கொண்டு வருகிறது. புதிய சட்டசபை கட்ட வேண்டும் என்பது அரசின் எண்ணம். அதற்கு சபாநாயகர் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

ஊதிய உயர்வு

சுகாதாரத்துறையில் காலி பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. என்.ஆர்.எச்.எம்., ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய மத்திய அரசு ஒப்புக் கொள்ளவில்லை.எனவே, சம்பளம் உயர்த்தி கொடுத்துள்ளோம்.செவிலியர்களுக்கு ரூ.11 ஆயிரத்தில் இருந்து ரூ.26 ஆயிரமாக உயர்த்தப்படும். சமூக பணியாளர்களுக்கு ரூ. 12 ஆயிரமும், அதற்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ.10 ஆயிரம் உயர்த்தி வழங்கப்படும். உதவி மகப்பேறு செவிலியர்களுக்கு 8,400ல் இருந்து 20 ஆயிரத்து 400 ரூபாயாக உயர்த்தப்படும்.பொதுவாக ரூ. 15 ஆயிரத்திற்கு கீழ் ஊதியம் வழங்க கூடாது என்பது அரசின் எண்ணம். அதனடிப்படையில், ஆஷா பணியாளர்கள், பொதுப்பணித்துறை வவுச்சர் ஊழியர்கள், ரொட்டிபால் ஊழியர்களுக்கு ஊதியம் உயர்த்தி கொடுத்துள்ளோம். ஆஷா பணியாளர்களுக்கு தற்போது வழங்கப்படும் ஊதியத்துடன் ரூ. 10 ஆயிரம் சேர்த்து ரூ. 18,000 வழங்கப்படும்.

12 ஆம்புலன்ஸ்

புதிதாக 12 ஆம்புலன்ஸ்கள் வாங்கப்பட்டுள்ளது. டிரைவர் பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுத்து வருகிறோம். லிங்காரொட்டிப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலையை தனியார் பங்களிப்புடன் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. காரைக்கால் மதர் தெரேசா கல்லுாரியில் காலி பணியிடம் விரைவில் நிரப்படும்.

கொம்யூன் ஊழியர்கள்

கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் 196 பேரை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். பொதுப்பணித்துறையில் 119 வவுச்சர் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்வதற்கான கோப்பு கவர்னரிடம் உள்ளது. விரைவில் கோரிக்கை நிறைவேற்றப்படும்.காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்தில் பணியில் இருந்து நீக்கப்பட்ட 156 பேருக்கு மீண்டும் வேலை வழங்கப்படும். மேலும், 20 ஆண்டுகளுக்கு மேலாக குறைந்த சம்பளத்தில் பணியாற்றும் டெக்னிஷியன்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். பொதுப்பணித்துறையில் பணியில் இருந்து நீக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் பணி வழங்கி, மாதம் ரூ.10 ஆயிரம் ஊதியம் வழங்கப்படும்.

புதுச்சேரி மாநாகராட்சி

புதுச்சேரி மற்றும் உழவர்கரை நகராட்சிகளோடு, அரியாங்குப்பம், வில்லியனுார் ஒட்டிய நகர அமைப்பு பகுதிகளை இணைத்து புதுச்சேரி மாநகராட்சி உருவாக்கப்படும்.இதனால் நிதி ஆதாரம் மேம்படும். நகர அமைப்பு, சுகாதாரம், கல்வி மற்றும் இதர கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முடியும்.

நல்வாழ்வு ஊதியம்

இடுகாடுகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு மாதம் நல்வாழ்வு ஊதியமாக ரூ.3,000 வழங்கப்படும். இதன் மூலம், 600 குடும்பங்கள் பயன்பெறும்.

மதிப்பூதியம் உயர்வு

அங்கன்வாடிகளில்பணிபுரியும் தற்காலிக ஊழியர்களின் மாத மதிப்பூதியம் ரூ. 6,450ல் இருந்து ரூ. 12 ஆயிரமாகவும், உதவியாளர்களின் மாத மதிப்பூதியம் ரூ. 4,375 இல் இருந்து ரூ. 10 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்கப்படும். ஊரக வளர்ச்சி துறையில் பணியாற்றும் சமூக வல்லுநர்களின் ஊதியம் ரூ.10 ஆயிரமாகஉயர்த்தி வழங்கப்படும்.

மீண்டும் வேலை

குடிசை மாற்று வாரியத்தில் கல்வீடு கட்டும் திட்டத்தை மீண்டும் கொண்டு வந்து சிறப்பாக செயல்படுத்த உள்ளோம். இதற்காக பணியாளர்கள் தேவைப்படுகின்றனர். எனவே, அங்கு ஏற்கனவே பணிபுரிந்து நீக்கப்பட்ட ஊழியர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்படும். பாட்கோவை தலைநிமிர வைத்து அதிலும் நீக்கப்பட்ட ஊழியர்களுக்கு பணி வழங்கப்படும். பி.டி.டி.சி., போன்ற நிறுவனங்களில் நிர்வாகம் சரியாக நடைபெற்றால் அவற்றிற்கு வேண்டியதை அவர்களே செய்து கொள்ளலாம்.

பணி நிரந்தரம்

ஒ.சி.எம்., பணியாளர்களை நிரந்தரம் செய்வது குறித்து தலைமை செயலரிடம் பேசி உள்ளேன். ஏற்கனவே சட்டசபை பணியாளர்கள் நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். அந்த விதிகளை பின்பற்றி பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

வாரிசுகளுக்கு வேலை

கருணை அடிப்படையில் விண்ணப்பித்த வாரிசுதாரர்களுக்கு எம்.டி.எஸ்., ஆக பொதுப்பணித் துறையில் பணி வழங்கி உள்ளோம். சுகாதாரத்துறையில் கொடுத்து கொண்டு உள்ளோம். அதுபோல் பிற துறைகளில் உள்ள வாரிசுதார்களுக்கு ஒரு முறை தளர்வு அடிப்படையில் பணி வழங்க கோப்பு தயாராகி உள்ளது. விரைவில் அவர்களுக்கு பணி வழங்கப்படும்.எம்.எல்.ஏ.,க்கள் என்ன நினைக்கிறார்களோ அதை எல்லாம் செய்து கொடுக்கும் முனைப்போடு அரசு செயல்பட்டு வருகிறது. தேர்தலுக்கு ஒரு ஆண்டு மட்டுமே இருப்பதாக நினைக்கலாம். ஆனால், 6 மாதத்திற்குள்ளே நிச்சயமாக விரைவாக செயல்பட்டு அறிவித்த அனைத்தையும் நிறைவேற்றுவோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை