எதிர்பார்த்தது போன்று ஸ்மார்ட் சிட்டி உருவாகவில்லை காங்., ஆட்சியின் மீது முதல்வர் ரங்கசாமி குற்றச்சாட்டு
புதுச்சேரி: சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது நடந்த விவாதம்;நேரு எம்.எல்.ஏ.,(சுயே): ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் உருளையன்பேட்டை தொகுதியில் எந்தந்த பணிகள் நடக்கின்றது. ஒவ்வொரு பணிக்கும் எவ்வளவு செலவிடப்பட்டது.முதல்வர் ரங்கசாமி: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 6 பணிகள் நடந்து வருகின்றது. இதில் இரண்டு பணிகளை தவிர மீதமுள்ள பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. அண்ணா திடல் சிறுவிளையாட்டு அரங்கம் ரூ. 17.35 கோடி, பி.ஆர்.டி.சி., பணிமனை முதல் உப்பனாறு வரை வாய்க்கால் அமைக்க ரூ. 3.57 கோடி, காமராஜர் சாலை முதல் மறைமலை அடிகள் சாலை வரை உப்பனாறு வாய்க்காலில் இருபுறமும் சீரமைக்க ரூ. 4.59 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் குண்டு சாலை வாய்க்காலை மறுகட்டமைக்க ரூ. 101 கோடி, சுதேசி மில் வளாகத்தில் நகர்புற சுற்றுலா திட்டத்திற்கு ரூ. 5.25 கோடி, ராஜிவ் காந்தி ஒருங்கிணைந்த ஸ்மார்ட் பஸ்டாண்ட் ரூ. 31.50 கோடி ஒதுக்கி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.நேரு எம்.எல்.ஏ.,(சுயே): உருளையன்பேட்டையில் எந்த பணியும் ஒழுங்காக நடக்கவில்லை. அதிகாரிகள், துறைகளுக்குள் பேச்சுவார்த்தை கூட இல்லை. இப்படி இருந்தால் ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடக்குமா.முதல்வர் ரங்கசாமி: மத்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சராக வெங்கைய நாயுடு இருந்தபோது புதுச்சேரிக்கு ஸ்மார்ட் சிட்டி திட்டம் போராடி பெற்றோம். ஆனால் கடந்த ஆட்சியில் இத்திட்டம் சரியாக மேற்கொள்ளப்படவில்லை. இதனால் கடைசி நேரத்தில் அவசர கோலத்தில் பணிகளை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.எதிர்பார்த்ததுபோன்று ஸ்மார்ட் சிட்டி நகரமாக புதுச்சேரி உருவாகவில்லை. இது உண்மை தான். இந்த திட்டத்தின் மூலம் நிறைய பணிகளை புதுச்சேரியில் செய்திருக்க முடியும். இன்னும் ஒரு மாதம் தான் உள்ளது. அதற்குள் அனைத்து பணிகளையும் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.