சுகாதாரத்துறையில் 126 வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி முதல்வர் ரங்கசாமி தகவல்
புதுச்சேரி : புதுச்சேரி சுகாதாரத்துறையில், கருணை அடிப்படையில், 126 பேருக்கு பணி வழங்கப்பட உள்ளதாக, முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.புதுச்சேரி அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல வழித்துறை, உள்ளாட்சி துறை ஆகியன இணைந்து, துாய்மை பணியாளர்களுக்கான சீருடை வழங்கும் விழா மற்றும் மருத்துவ முகாம் உழவர்கரை நகராட்சியில் நடந்தது. இதில் முதல்வர் ரங்கசாமி பங்கேற்று, துாய்மை பணியாளர்களுக்கு சீருடைகளை வழங்கி பேசியதாவது:உள்ளாட்சித்துறை மூலம், கொசு மருந்து தெளிக்கும் பணி நடக்கிறது. கடந்தாண்டை விட, இந்தாண்டில் டெங்கு காய்ச்சல் தாக்கம் குறைந்துள்ளது. குப்பையை அள்ள தனியார் நிறுவனத்திடம் பணிகளை வழங்கி உள்ளோம்.இதற்காக கோடிக்கணக்கில் அரசு பணம் செலவழிக்கிறது. தனியார் நிறுவனம், விதிமுறைப்படி குப்பைகளை அகற்றுகிறார்களா என, அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். அவர்கள் சரியாக செயல்படாவிட்டால், அபராதம் விதிக்க வேண்டும்.புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை செய்தவர்களில், 99 சதவீதத்தினர் பூரண குணத்தோடு உள்ளனர். சென்னையில் சிகிச்சை செய்தால், ரூ.7 லட்சம் வரை, செலவாகும். தற்போது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையும், அரசு மருத்துவமனையில் செய்ய துவங்கி உள்ளோம்.எலும்பு முறிவு சிகிச்சைக்கும் நிபுணர்கள் உள்ளனர். கதிர்காமம் அரசு மருத்துவ கல்லுாரியில், 13 அறுவை சிகிச்சை கூடங்கள் விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளன. இதற்கான நிபுணர்களையும், நியமிக்க உள்ளோம். சுகாதாரத்துறையில், 126 வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கப்பட உள்ளது. இதற்கான கோப்பு தயாராகி வருகிறது. உள்ளாட்சித்துறையிலும், பணியின் போது இறந்தவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க உள்ளோம்.இவ்வாறு அவர் பேசினார். இந்த விழாவில் சிவசங்கர் எம்.எல்.ஏ., சுகாதாரத்துறை இயக்குனர் செவ்வேல், உள்ளாட்சித்துறை இயக்குனர் சக்திவேல், உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் மற்றும் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.