உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பருவ மழையை எதிர்கொள்ள தயாராகுங்கள்; அதிகாரிகளுக்கு தலைமைச் செயலர் உத்தரவு

பருவ மழையை எதிர்கொள்ள தயாராகுங்கள்; அதிகாரிகளுக்கு தலைமைச் செயலர் உத்தரவு

புதுச்சேரி : வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது.கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, தலைமை தாங்கிய தலைமை செயலர் ஷரத் சவுகான் கூறியதாவது: வடகிழக்கு பருவமழை இம்மாதம் இறுதியில் துவங்க உள்ளது. பருவநிலை மாற்றம் காரணமாக மழைப் பொழிவு அதிகரிக்கக்கூடும். அதனால், மழையால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க அனைத்து துறையினரும் தயார் நிலையில் இருக்க வேண்டும். அனைத்து நீர்நிலைகள், வாய்க்கால்கள் மற்றும் நீர் வழிப்பாதைகள் துரிதமாக துார்வாரப்பட வேண்டும். பேரிடர் காலத்தில் பொதுமக்களை தங்க வைக்க பள்ளி கட்டடங்கள் நல்ல நிலையில் உள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். அங்கு குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும்.மருத்துவமனைகளில் தேவையான மருந்துகளை இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும். பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சித்துறை மழை காலங்களில் தேவைப்படும் உபகரணங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். சாலைகளில் மரங்கள் சாய்ந்தால், உடனடியாக அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.மீன்வளத்துறையினர் படகுகள் இயக்குபவர்களை அவசரத்திற்கு பயன்படுத்த ஏதுவாக தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு வானிலை ஆய்வுத்துறையின் எச்சரிக்கைகளை உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும். மின்கம்பங்களின் நிலைத்தன்மையை ஆய்வு செய்து உறுதிப் படுத்த வேண்டும். அனைத்து துறைகளின் கட்டுப்பாட்டு அறைகள் 24 மணி நேரமும் செயல்பட வேண்டும். மழைநீர் தேங்கி உள்ள இடங்களில் உடனுக்குடன் நீரை அப்புறப்படுத்த தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார்.கூட்டத்தில், துறை செயலர்கள், வருவாய், சுகாதாரம், உள்ளாட்சி, தீயணைப்பு, கலெக்டர்கள், மாகே மற்றும் ஏனாம் பிராந்திய நிர்வாகிகள் பிற துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ