உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பிரெஞ்சுக்காரர்களின் மனதோடு உறவாடிய சர்க்கிள் த பாண்டிச்சேரி

பிரெஞ்சுக்காரர்களின் மனதோடு உறவாடிய சர்க்கிள் த பாண்டிச்சேரி

தற்போது வாடகை பாக்கியில் சிக்கி இருக்கும் சர்க்கிள் த பாண்டிச்சேரி எனும், மன மகிழ் மன்றத்தின் அழகிய நேர்த்தியான கட்டடத்திற்கு பிரெஞ்சு வரலாற்றுடன் மட்டுமின்றி, பிரெஞ்சியர்களுடன் மனதோடும் நெருக்கமான தொடர்பு உண்டு.உல்லாச பொழுதுபோக்கு பிரியர்களான பிரெஞ்சுக்காரர்கள் புதுச்சேரியில் நீண்ட நாட்கள் தங்கி, பணிபுரிய வேண்டிய இருந்தது. இது அவர்களை சோர்வடைய செய்தது. இதனால் மனசோர்வு நீங்கி, ஒவ்வொரு நாளும் உற்சாகமாக இருக்க தங்களுக்கென ஒரு பொழுது போக்கு கிளப்பினை கடந்த 1899 ம் ஆண்டு, 'சர்கிள் தி பொந்திேஷரி' என்ற பெயரில் சட்டசபையின் வடக்கு பகுதியில் விக்தர் சிமோனல் வீதியில் தோற்றுவித்தனர்.ஆரம்ப காலத்தில் பிரெஞ்சு அரசின் முக்கிய பதவியில் இருந்தவர்கள், பிரெஞ்சு அதிகாரிகள், ஐரோப்பியர்கள் மட்டுமே அங்கு உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர். மற்றவர்கள் அங்கு உள்ளே நுழைய அனுமதிக்கப்படவில்லை.1936ல் கோன்சேய் ழெனேராலிவ் உத்தரவின்படி நிற வேற்றுமையின்று அனைவரையும் சேர்த்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. ஆனாலும் உள்ளூர் மக்களை சேர்க்க ஏனோ பிரெஞ்சியர்களுக்கு மனம் இல்லை. ஓரவஞ்சனையாகவே இருந்தனர். ஒருவழியாக 1954க்கு பிறகு தான் உள்ளூர் மக்கள் அந்த பொழுது போக்கு மன்றத்தில் சேர்க்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்த கட்டடம் 1938ல் அப்போதைய பிரெஞ்சு அரசின் பொதுப்பணித் துறையால் சேர்க்கிள் த பொந்திேஷரிக்கு வழங்கப்பட்டுள்ளது. அது முதல் பொதுப்பணித் துறை தான் எஸ்டேட் அதிகாரிகளை நியமித்து அனைத்தையும் கவனித்து வருகிறது. சர்க்கிள் த பாண்டிச்சேரியில் பெத்தாங், டென்னிஸ், பேட்மிட்டன் விளையாட விசாலமான மைதானங்கள் உள்ளன.இதனால் உறுப்பினர்களாக உள்ளவர்கள் இங்கு வந்து தங்களுக்குள் அணியாக பிரிந்து உற்சாகமாக விளையாடுகின்றனர். மாலையில் மது, சூதாட்டம் என்றும் பொழுதுபோக்கு களைகட்டுகின்றது. இதனால் மன மகிழ்விற்காக உறுப்பினர்கள் கூடுகின்றனர். இது தவிர அரசு விழா நாட்கள், உறுப்பினர்கள் பிறந்த நாட்கள், கிறிஸ்துமஸ், புத்தாண்டு போன்ற பண்டிகை நாட்களில் சிறப்பு விருந்துகளும் பறிமாறப்படுகின்றன.பிரெஞ்சி ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட சேர்கிள் தி பொந்திேஷரிக்கு 1 ரூபாய் வாடகை பிரெஞ்சு அரசினால் நிர்ணயிக்கப்பட்டது. அதன் பிறகு 1978ல் கட்டடத்திற்கு 930 ரூபாய், டென்னிஸ் கோட்டிற்கு 668 ரூபாய், காலி இடத்திற்கு 1,646 ரூபாய் வாடகை நிர்ணயிக்கப்பட்டது. காலியாக இருந்த இடம் 1980ல் தொலை தொடர்பு துறைக்கு மாற்றப்பட்டது.கடைசியாக சர்க்கிள் த பாண்டிச்சேரி கிளப்பிடம் இருந்த 45,838 சதுர அடி நிலத்திற்கு 1,592 ரூபாய் மாதத்திற்கு வாடகை வசூலிக்கப்பட்டது. கடந்த 21.06.2011ல் வடக்கு துணை கலெக்டர் 10,71,745 ரூபாய் மாதம் வாடகை கட்ட வேண்டும் என மாற்றியமைத்தார். ஆனால் புதுச்சேரி அரசு இந்த வாடகையை வசூலிக்கவில்லை. இந்த சூழ்நிலையில், தான் கடந்த 2010ம் ஆண்டு முதல் 14 ஆண்டுகளாக அரசுக்கு வாடகை தராத 'சர்க்கிள் த பாண்டிச்சேரியை' வெளியேற்ற புதுச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டு முடிவுரை எழுதியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை