உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கடலோர போதைப்பொருள் தடுப்பு பிரிவு துவக்கம்: சீனியர் எஸ்.பி., தீபிகா தகவல்

கடலோர போதைப்பொருள் தடுப்பு பிரிவு துவக்கம்: சீனியர் எஸ்.பி., தீபிகா தகவல்

புதுச்சேரி: கடல் வழியாக போதை பொருள் கடத்தலை தடுக்க புதுச்சேரி, மாகி மற்றும் ஏனாமில் புதிதாக கடலோர போதைப்பொருள் தடுப்புப் பிரிவுகள் துவங்கப்பட்டுள்ளதாக சீனியர் எஸ்.பி., தீபிகா அறிவித்தார். காரைக்காலில் இருந்து இலங்கைக்குக் கடந்த மாதம் கடத்த முயன்ற ரூ.6.08 கோடி மதிப்பிலான 7.605 கிலோ மெத்தாம்பெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. அதுபோல், நாகப்பட்டினத்திலும் படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ. 270 கோடி மதிப்புள்ள 135 கிலோ மெத்தம்பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டன. அதில், ரயில், சாலை, விமானம் மூலம் போதை பொருள் கடத்தலை தடுக்க சிறப்பு பிரிவுகள் இயங்கி வருகிறது. ஆனால், கடல் வழி நடக்கும் கடத்தல்களை தடுக்க சரியான அமைப்பு இல்லை. இதனால், புதுச்சேரி, மாகி, ஏனாம் கடலோர பகுதியில் போதைபொருள் கடத்தல் மற்றும் பயன்பாட்டை தடுக்கும் நோக்கில், அந்தந்த கடலோர போலீஸ் ஸ்டேஷன்களில் பணியாற்றும் போலீசார் மற்றும் அதிகாரிகளை கொண்டு கடலோர போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த பிரிவு போலீசார் தங்களது வழக்கமான பணிகள் மற்றும் பொறுப்புகளுடன் கடல் வழியாக போதை பொருள் கடத்துவது, கடலோர பகுதி மக்களால் போதைபொருள் விநியோகம், பயன்பாடு தொடர்பான உளவு தகவல்கள் சேகரித்தல், கடலோர கிராமங்களில் போதை பொருட்கள் பயன்பாட்டிற்கு எதிராக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள உள்ளதாக சீனியர் எஸ்.பி., தீபிகா தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை