38,765 கிலோ நெகிழி கழிவு அகற்றம் ஆணையர் சுரேஷ்ராஜ் தகவல்
புதுச்சேரி: உழவர்கரை நகராட்சி சார்பில், துாய்மையே சேவை, இருவார துாய்மை பணியின் மூலமாக, 38 ஆயிரத்து 765 கிலோ நெகிழி கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது. உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் செய்திக்குறிப்பு; மத்திய அரசின் துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ் துாய்மையே சேவை நாடு முழுதும் ஆண்டு தோறும் செப்., 17ம் தேதி முதல் அக்டோபர் 2ம் தேதி வரை நடைபெறும், தேசிய அளவிலான இருவார துாய்மை பணியாகும். இந்த ஆண்டு துாய்மை சேவை 2025,துாய்மை திருவிழா' முழு அரசு'மற்றும் முழு சமூகம் என்ற கருத்துகளுக்கு இணங்க சுற்றுச்சூழலுக்கு உகந்த, குப்பையில்லா புதிய கொண்டாட்டங்களுக்கு முன்னுதாரணங்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு செயல்படுத்தப்படுகிறது. இதனை, கவர்னர் கைலாஷ்நாதன், கடந்த 17ம் தேதி மணப்பட்டு கிராமத்தில் துவக்கி வைத்தார். தொடர்ந்து, புதுச்சேரி முழுதும் பள்ளி மாணவர்கள், நாட்டு நலப்பணித்திட்ட தன்னார்வலர்கள், தேசிய மாணவர் படையினர், மகளிர் சுய உதவி குழுக்கள், மற்றும் பொதுமக்களின் பங்களிப்போடு, புதுச்சேரியில் உள்ள 5 உள்ளாட்சி அமைப்புகளுக்குட்பட்ட பூங்காக்கள், பள்ளி, கல்லுாரி வளாகம், கோவில்கள் என, 130 இடங்களில், துப்புறவு பணியின் மூலமாக 38 ஆயிரத்து 765 கிலோ நெகிழி கழிவுகள் தனியாக சேகரிக்கப்பட்டு அகற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.