பேனர் வைத்தவர் மீது புகார்
அரியாங்குப்பம்: தவளக்குப்பத்தில் அனுமதியின்றி, பேனர்கள் வைத்த நபர் மீது பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர் போலீசில் புகார் செய்துள்ளார்.அரசியல்வாதிகள் பிறந்த நாள், திருமண நிகழ்ச்சி என பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு சாலையில் பேனர்கள் வைப்பதால், விபத்து மற்றும் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது. சாலையில், பேனர்கள் வைப்பவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்து வருகின்றனர். இந்நிலையில், தவளக்குப்பம் பகுதியில், பொதுப்பணித்துறை, உதவிப்பொறியாளர் ஜெயராஜ் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்தின், அனுமதியின்றி, பூரணாங்குப்பம் சாலை முதல் தவளக்குப்பம் சந்திப்பு வரை சாலையில், திருமண விழா நிகழ்ச்சிக்கு பேனர்கள் வைத்துள்ளனர். பேனர்கள் வைத்த நபர் மீது, உதவிப்பொறியாளர் தவளக்குப்பம் போலீசில் புகார் அளித்தார்.போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.