சாலைகள் சேதமாவதை தடுக்க எம்.டி.பி.இ., குழாய் அமைச்சர் தலைமையில் ஆலோசனை
புதுச்சேரி: சாலைகள் சேதமாவதை தடுக்க வலுவான எம்.டி.பி.இ., பைப்புகளை புதுச்சேரியில் புதைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.புதுச்சேரி பொதுப்பணித் துறை சாலை போட்டதும், மறுநாளே கேபிள், தண்ணீர் குழாய் புதைக்க போகிறோம்; அதற்காக பள்ளம் தோண்ட போகிறோம் என காரணத்தை கூறி கொண்டு வந்து விடுகின்றனர். அப்படியே அந்த பள்ளத்தை தோண்டினால் அதை சரிவர மூடுவதும் இல்லை. இதனால் சாலைகள் சில நாட்களிலேயே குண்டு குழியுமாக மோசமாகிவிடுகின்றது. இந்நிலையில், சாலைகள் சேதமாவதை தடுக்க எம்.டி.பி.இ., பைப்புகளை புதுச்சேரியில் புதைப்பது தொடர்பாக நேற்று சட்டசபையில் மத்திய அரசு நிறுவனமான ரைட்ஸ் நிறுவன அதிகாரிகளின் கருத்துகேட்பு, ஆலோசனை கூட்டம், அமைச்சர் லட்சுமி நாராயணன் தலைமையில் நடந்தது. இதில் அமைச்சர் கூறும்போது, சாலைகளை சேதமாக்காமல் குடிநீர் குழாய், கழிவு நீர் குழாய்களை பதிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு எச்.டி.பி.இ., குழாய் தொழில்நுட்பம் உதவுகிறத. கோவா மாநிலத்தில் குழாய்கள் சாலைகளில் வெற்றிகரமாக குடைந்து பதிக்கப்பட்டுள்ளது. செலவு அதிகம் என்றாலும், சாலைகள் சேதமாவது தடுக்கப்படும். இந்த எச்.டி.பி.இ., குழாய்கள் பதிப்பது தொடர்பாக புதுச்சேரி அதிகாரிகள் கோவா சென்று ஆய்வு செய்வர். அதன் பிறகு புதுச்சேரியில் அமைப்பது குறித்து முதல்வரிடம் கலந்து பேசி அமைக்கப்படும் என்றார்.