ஒப்பந்த ஆசிரியர்கள் உண்ணாவிரதம்
புதுச்சேரி: ஒப்பந்த ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரி இரண்டாம் நாளாக உண்ணாவிரத போராட்டம் நடந்தது. பள்ளி கல்வித்துறையில் பணியாற்றும் 292 ஒப்பந்த ஆசிரியர்கள் பணி நிரந்தரம் கோரி, பல போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, நேற்று இரண்டாம் நாளாக அண்ணா சிலை அருகே தொடர் உண்ணாவிரத போராட்டம் அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு கவுரவ தலைவர் சேஷாசலம் தலைமையில் நடந்தது. சங்க தலைவர் பாலகுமார், தலைமை ஆசிரியர் சங்க தலைவர் சிரில் நிக்கோலஸ், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்க தலைவர் பொற்செழியன், விரிவுரையாளர் சங்க தலைவர் அருள்சாமி, பட்டதாரி ஆசிரியர் சங்க தலைவர் ராமதாஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.