ரயில்வே மேம்பாலத்தில் விரிசல்; அமைச்சர் லட்சுமிநாராயணன் ஆய்வு
புதுச்சேரி : புதுச்சேரி நுாறடிச்சாலை ரயில்வே மேம்பாலம் விரிசல் விழுந்ததால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். புதுச்சேரியில் நேற்று முன்தினம் இரவு முதல் தொடர் மழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதியில் தேங்கிய மழைநீர் வெளியேற்றப்படுகிறது. மழை காரணமாக புதுச்சேரி நுாறடிச்சாலை ரயில்வே மேம்பாலத்தில், இ.பி.எப்., அலுவலகம் மற்றும் ஜான்சி நகர் செல்லும் சாலை சந்திக்கும் இரு இடங்களில் மேம்பாலத்தில் விரிசல் விழுந்ததுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது.அதையடுத்து, பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் தலைமையில் அதிகாரிகள் நேற்று மேம்பாலத்தை ஆய்வு செய்தனர். நுாறடிச்சாலை ரயில்வே மேம்பாலம் ரூ. 35.72 கோடி மதிப்பில், கடந்த 2013ம் ஆண்டு துவங்கி கட்டுமான பணி துவங்கி கடந்த 2018ம் ஆண்டு இறுதியில் திறக்கப்பட்டது. பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் கூறுகையில், 'மேம்பாலம் கட்டும்போது மண் நிரப்பும் போது சரியான முறையில் அமையாததால் இதுபோல் விரிசல் விழுந்துள்ளது. இவை உடனடியாக சரிசெய்யப்பட வேண்டும். தமிழகத்தில் இதுபோன்ற மேம்பாலத்தில் ஏற்பட்ட விரிசல்கள் சரிசெய்த நிபுணர்கள் வரவழைத்து ஆய்வு செய்து எவ்வாறு சரிசெய்தல் வேண்டும் என முடிவு செய்து பணிகள் துவங்கும் என கூறினார்.