ஆன்லைனில் கடன் பெற்ற 400 பேரிடம் ரூ. 2 கோடி மோசடி சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை
புதுச்சேரி,: போலி செயலியில் கடன் பெற்று 400க்கும் மேற்பட்டோர் ரூ.2 கோடிக்கு மேல் இழந்துள்ளதாக சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சமூக வலைத்தளங்களான இன்ஸ்டாகிராம், பேஸ்புக், வாட்ஸ் ஆப் போன்றவற்றில் உடனடி கடன் தருவதாக பல விளம்பரங்கள் வருகிறது. அதை நம்பி, கடன் பெறுவதற்கான செயலியை மொபைலில் பதிவிறக்கம் செய்து கடன் பெற்றால், சைபர் மோசடி கும்பல், செயலி மூலம் உங்களுடைய புகைப்படம் மற்றும் மொபைல் எண்களை திருடி விடுகின்றனர். பின், தவணை தொகை செலுத்தும் தேதிக்கு முன், தங்களை மர்மநபர்கள் வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொண்டு, கடன் பெற்ற தொகையை விட அதிக தொகையை இன்றே கட்ட வேண்டும் என மிரட்டுகின்றனர். அப்படி, கட்டவில்லை என்றால் உங்களுடைய புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து, உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பி விடுவதாக மிரட்டல் விடுகின்றனர். இதுபோன்று புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸ் ஸ்டேஷனில் 400க்கும் மேற்பட்டோர் ரூ. 2 கோடிக்கு மேல் இழந்துள்ளதாக புகார் அளித்துள்ளனர். விசாரணையில் சைபர் மோசடி கும்பல் பாகிஸ்தான், சீனா, கம்போடியா போன்ற நாடுகளில் இருந்து வாட்ஸ் ஆப் மூலம் மிரட்டுவது தெரிய வந்ததுள்ளது. ஆகையால் பொதுமக்கள் உடனடி கடன் செயலி மூலம் கடன் பெற வேண்டாம். அடையாளம் தெரியாத நபர்கள் வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொண்டால், சைபர் கிரைம் போலீசில் தெரிவிக்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் வரும் போலியான உடனடி கடன் செயலி விளம்பரங்களை நம்பி பதிவிறக்கம் செய்ய வேண்டாம்; கடன் பெற வேண்டாம். சைபர் கிரைம் சம்பந்தமான புகார் அளிக்க 1930, 0413 2276144, 9489205246 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.